செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மரபுவழி நலவாழ்வு மையம் நோக்கமும், செயல்களும்.

மரபுவழி நலவாழ்வு மையம் நோக்கமும், செயல்களும்.
 
நலவாழ்வு.
மக்களுக்கு, நலவாழ்வு என்பதே தற்காலத்தில் ஓர் ஆடம்பரமான, அன்னியமான சொல்லாகி விட்டது! எனது விளம்பரப் பலகையை பார்த்துவிட்டு பலர் வந்து கேட்டுச் செல்கிறார்கள். இது என்ன பெயர் அரசின் விதவைகள் நலவாழ்வு, அகதிகள் நலவாழ்வு என்பது போல, ஆஸ்பத்திரி, கிளினிக், மருத்துவமணை என்று பெயர் வையுங்கள். நலவாழ்வு மையம் என்பதே அரசின் புண்ணியத்தால் ஓர் ஏமாற்றுத் தனமான, அருவருப்பான சொல்லாகி விட்டது என்றனர், சிலர். பலர், பேர் மாற்றினால் தான் உங்களிடம் வந்து சிகிச்சை பெறுவோம் என்பது போல் சொல்லி விட்டுப் போயினர்.
 
நலவாழ்வு என்பதே மறந்து போய் விட்டதப்பா! அதிகாலையில் இருந்து இரவு வரை ஒரே ஓட்டம் தான். சில விநாடிகள் கூட தனக்காக வாழ மறந்து போய் விட்டது. ஏதோ பணம் சம்பாதிப்பதற்காகவே பிறந்து, அதையே வாழ்க்கையாக நிணைத்து தன் உணர்வுகளையும், அடிப்படைத் தேவைகளையும் கூட மறந்து வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என வாழ்பவர்கள் பலர். இவர்கள் அடுத்தவர்கள் நலனுக்காக - தனது கால் வயிற்று கஞ்சிக்காக தான் வாழும் காலம் எல்லாம் உழைத்தவர் – காலத்தை இழந்தவர்களாகிய அடித்தட்டு மக்கள்.
 
நான்கு காசு சம்பாதிக்க, குழந்தைப் பருவத்திலிருந்தே கல்வி  எனும் உப்புக்கும், புளிக்கும் ஆகாத குப்பைகளைத் தலையில் ஏற்றி, அடிமைகளாக வளர்க்கப் பட்டு தனது உணர்வுகளையும், தேவைகளையும் தலைமுறை தலைமுறையாக குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்துவிட்ட தியாகிகள் - நடுத்தர வர்க்கத்தினர்.தன் பெற்றோர் ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை காப்பாற்றவும், கரைக்கவும் கற்றுக் கொண்டு, மருத்துவர்களிடமும், வக்கில்களிடமும்  வாழ்க்கையைத் தொலைத்த பரிதாபத்திற்குரிய பணக்காரர்கள். தம் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புத் தேடியே, இல்லாத பெருமைக்காக, சக மனிதர்களைத் தின்று வாழும் பெரும் தலைவர்கள் கூட்டம் என இவர்களில் யாருமே நலமாக இல்லை. இவர்கள் யாருமே நிம்மதியாக, மகிழ்ச்சியாக, உடல், மன நலத்தோடு வாழ்பவர்கள் இல்லை. நலவாழ்வைச் சிந்திப்பவர்களாகவும் இல்லை.
 
அப்படியெனில், நலவாழ்வு என்றால் என்ன? அது யாருக்குத் தேவை?
நலவாழ்வு என்றால் என்ன? எனது புரிதல்
 
மனிதன் ஒரு கூட்டுவாழ்வுக்கான உயிரினம். இவனால் தனித்து வாழ முடியாது. பிற மனிதர்களுடனும், அகிலத்தில் படைக்கப் பட்ட ஒவ்வொன்றுடனும் சேர்ந்து வாழும் வகையிலேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். ஒரு வரையறைக்குள், ஒவ்வொன்றையும் தன் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள மனிதனை அனுமதித்துள்ளது படைப்பாற்றல். இதையே,
 
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.’’ -என்றனர் சான்றோர்.
 
இப்பொழுது மனிதன் தன் வரைமுறைகளை மறந்து, தன் அறிவின் பெருமையால் இயற்கையைச் சூரையாடி வருகிறான். தனது அடிப்படைத் தேவை என்ன என்பதையே மறந்து, தூய்ப்பு வெறிக்குள்ளாகி கண்ட குப்பைகளையெல்லாம் சேர்த்துக் கொண்டு, தன் அடிப்படைத் தேவைகளை புறக்கணித்து ­-அவற்றின் மூலத்தையே அழித்து வருகிறான்.
 
மனிதனின் அடிப்படைத் தேவையென்பது என்ன?
 
பசி, தாகம், தூக்கம், நல்ல நட்பு, உறவு இவையே அடிப்படைத் தேவை. இந்த அடிப்படைத் தேவைகளை மனித அறிவு உறுதியாக கொடுக்கச் சத்தியற்றது.
 
மேற்குறிப்பிட்ட மனிதர்கள் இதையெல்லாம் புறக்கணித்து விட்டுத் தான் பணத்துக்காக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! தாங்கள் சேர்த்த பணம் இந்த அடிப்படைத் தேவைகளை பெற்றுத் தரமுடியாது என்பதை அறிவதற்குள் தாங்கள் உருவாக்கிய, பணம் எனும் கேட்டிற்குத் தாமே அடிமையாகிச் செய்வதறியாது சிதைந்து போகிறார்கள். இதிலிருந்து விடுபட இவர்கள் செய்யும் முயற்சிகளெல்லாம் மேலும், மேலும் அடிமைத் தனத்தையே, அழிவையே தருகிறது.
 
விரிவாகச் சொல்லப் போனால், இப்போதய சூழலில், எவ்வளவு தான் பணம் செலவு செய்தாலும் தூய காற்றைப் பெற முடியாது. நஞ்சில்லாத உணவையும் இந்த அறிவாளிகளால் பெறவே முடியாது. தண்ணீரும் அவ்வாறே உள்ளது. தானும், தனது வாரிசுகளும் குடியிருக்க பாதுகாப்பான இடத்தை என்ன செலவு செய்தாலும் எந்தக் கொம்பனாலும் அவன் எத்தனை லட்சம் கோடி வைத்திருந்தாலும் பெறவே முடியாது. எத்தனை பேர் அவர்களை பணத்துக்காக சுற்றி இருந்தாலும் ஒரே ஒரு உண்மையான நட்பும் அவர்களுக்குக் கிடைக்காது. ஒரு விநாடி கூட நிம்மதியான தூக்கத்தை அறிய மாட்டார்கள்.
 
இந்த நிலை, பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைப் பெருமையாக நிணைக்கும், தானும் பணக்காரனாகத் துடிக்கும் ஏழைகளுக்கும் தான். அடுத்தவனைச் சுரண்டிப் பிழைக்கும் பணத்தைச் சுமப்பவர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையைப் பாரமாக்கி – தானே தனக்குப் பாரமாகிப் போன இல்லாதவர்களுக்கும் தான். சொல்லப் போனால் இருப்பவனை விட இல்லாதவன் பணத்துக்கு எல்லாவகைகளிலும் அடிமையாகிப் போயிருக்கின்றனர் இந்த சமுதாயத்தில்.

இதிலிருந்து விடுபட விருப்பமுள்ளவர் யார்?
தனது தேவையை உணர்ந்த மனிதனே, அதை அடைய முடியும். ஜென் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் ‘உச்சியை அடைவதற்கான பயணம்  உச்சியிலிருந்தே தொடங்க வேண்டும்’’.
 
நம்முடைய தேவை என்ன?
நல்ல தூய்மையான குளிர்ந்த காற்று. நல்ல சுவையான, தூய்மையான, உயிர்த்தண்மையுள்ள குளிர்ந்த தண்ணீர். உடலுக்கும், மனதுக்கும் சுகமளிக்கும் சுவையான, உயிர்த்தண்மை மிகுந்த உணவுகள். நல்ல குளிர்ச்சியான இயற்கைச்சூழல். குளித்து விளையாட வற்றாத தடையில்லாத ஆறுகள், ஏரி, கண்மாய், குளம், கினறுகள். இதையெல்லாம் இருந்து கொண்டாட நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார். நம்மை நல்வழிப்படுத்த தமிழாய்ந்த சான்றோர்கள். சமுதாயத்துடன் சேர்ந்து இயற்கைக்கு நமது பங்களிப்பைத் தர மனதுக்குகந்த நல்ல உழைப்பு. சாகாக்கலைக்கு வழிகாட்டும் தமிழ்கல்வி. தன்னைப் புதுப்பித்துக்கொள்ளத் தேவையான ஆழ்ந்த அமைதியான தூக்கம். இதெல்லாம் நமது அடிப்படை உயிர்த் தேவை.
 
இதெல்லாம் நடக்குமா?
உறுதியாக முடியும்.
 
படைப்பாற்றல் நமக்கு அருளியுள்ள அறிவை, ஞானத்தை நமது நன்மையை நாடி இறையச்சத்தோடு பயன்படுத்தினால் இது எளிதில் நடக்கும்.
 
மையப்படுத்தப் பட்ட அதிகாரம், மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறை, தூய்ப்பு வெறிமிக்க வாழ்க்கை முறைகளை, அடிமை-வன்முறைச் சிந்தனைகளைக் களைந்து விட்டால் இது எளிதில் நடக்கும்.
 
சான்றோர்களின் வழியில், எளிய, பரவலாக்கப் பட்ட எளிய சூழல் கேடில்லாத உற்பத்தி முறைகளையும், வாழ்க்கை முறைகளையும், கூட்டுவாழ்வின் நெறிகளையும் பின்பற்றி சூழலின் மீது இணக்கத்துடனும், நட்புடனும், அன்பால் சேர்ந்து வாழ்ந்தால் இது மிக எளிதானது தான்.
 
தலைவர்களையும் அவர்கள் அமைப்புகளின் மீதுள்ள அடிமைத் தனத்தையும் விடுத்து தமிழ்ச் சான்றோர் வழியில் நாம் சிந்தித்துணர்ந்து செயல்பட்டால் இது எளிதில் முடியும்.
 
கடந்த சில நூற்றாண்டுகளாக, குறிப்பாக தற்போதய வணிகர்களின் நவீன உயர் தொழில் நுட்ப அறிவின் கேடுகளை பார்த்த நம்மால் மனித அறிவின் கேடுகள் குறித்து இதற்கு மேல் பட்டுணர- பட்டு மீள முடியாது. மாற்று உடனே தேவை அது நமது உயிர்த் தேவை. இதைச் சிந்தித்தாலே சரியான வழியில் செல்ல முடியும். இப்பொழுதும் கூட படைப்பாற்றலின் அருளால் நன்மையை நாடி சிந்தித்துணர்ந்த ஞானிகளும், சித்தர்களும் எளிய – மிக எளிய வழிகளை மனித குல நலத்திற்காக சோதித்து நடைமுறைப்படுத்தித் தந்துள்ளனர் - தந்து கொண்டுமுள்ளனர். இவர்களின் வழிகாட்டுதலால் இப்போதய கேடுகளை மிக எளிதில் நலவாழ்வை - நம் வாழ்வை மீட்டெடுக்க முடியும்.
 
மேலும், இது - நலவாழ்வு என்பது – எல்லா மனிதர்களது தேவையும் கூட,. இதைப் பெறுவதற்க்கு தடையாக எந்த மனிதனும் வர மாட்டார்கள் நன்மை - நம்மை புரியாமையாலும், தனது சுய நலத்தை அறியாமலும் சிலர் எதிராக இருந்தால்; விரைவில், அவர்கள் தங்களது நன்மை எது என சிந்தித்து உணர்ந்து கொள்வார்கள்.

மரபுவழி நலவாழ்வு மையத்தின் நோக்கம்
 
  • தன் நலன் எது எனத் தெரியாத மக்களுக்கு நிகழ்காலத்தினை உணர்த்தி, அவர்களது உண்மைத் தேவைகளைத் தெரியப்படுத்தி, தன் நலனை தான் புறக்கணித்ததே, அவர்களது அன்றாட வாழ்வு நரகமானதற்கான காரணம் என விளங்க வேண்டும்.
  • இந்த நவீன அறிவின் கேடுகளான உடல் நல, மன நலக் கேடுகளை எளிய சான்றோர்களின் வழியில் நீக்கிக் காட்டி, நம்பிக்கையூட்டி அவர்கள் வாழ்வும் –  சமூக வாழ்வும் நலமடைய உதவுதல்.
  • மனித வாழ்வுக்கும், அகிலத்தின் சூழலுக்கும் நலம் செய்யும் எளிய உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான உற்பத்தி முறைகளையும், வாழ்க்கை முறைகளையும் சான்றோர்களிடமிருந்து தொகுத்துத் தருதல்.
  • கல்வி, மருத்துவம், அறிவியல், கடவுள் வழிபாடு, சுய நலம், தலைமை வழிபாடு போன்றவற்றிலிருக்கும் மூடநம்பிக்கைகளை அடையாளங்காட்டி சரியான வாழ்வாதாரங்களை உருவாக்குதல் – தொகுத்துத் தருதல்.
  • சித்தர் அறிவியலை - மருத்துவ முறைகளை, விதைகளை, குழந்தைகள் நலனை வணிகர்கள் கைகளிலிருந்து விடுவித்து மீண்டும் அதன் இருப்பிடமான நம் வீட்டுப் பெண்கள் கரங்களில் கொண்டு சேர்ப்பது நமது உடனடித் தேவை.
  • கடந்த சில தலைமுறைகளாக வந்த வணிகர்களின் நவீன உயர் தோழில்நுட்ப அறிவியல் உருவாக்கிய மனிதத்துக்கு-இயறகைக்கு எதிரான மூடநம்பிக்கைகளை மக்களிடம் அடையாளப்படுத்தி அவற்றின் தீமைகளை விலக்கி, வரும் தலைமுறைக்கு நாமறிந்த, சான்றோர் வழிகளைத் தொகுத்துப் பாதுகாத்து கையளிப்பது. இது நம்மால் மட்டுமே முடியும். நாம்-நமது தலைமுறை இந்த சமுதாயக் கடமையைச் செய்யாவிடில் நமது முன்னோரின் அறிவெல்லாம் பழங்கதையாகிப் போகும். நமது வாரிசுகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
  • உலக மக்கள் தமது பெருமைகளைக் கைவிட்டு இன, மொழி, சாதி, மத, கட்சி, வர்க்க வேற்றுமைகளைக் கடந்து – மறந்து மனிதகுலத்தைக் காக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. இப்பொழுது சிந்திக்கத் தவறினால் இனி எப்போதும் மனிதம் தலையெடுக்க முடியாது.
  • உலகமெங்கும் இது போலச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. எளிமையான நலவாழ்வுக்கான இயற்கை ஆதாரங்களை திரும்ப பெறுவதற்கான உற்பத்தி முறைகள் விழிப்புணர்வடைந்த மக்களால் மீட்டெடுக்கப் பட்டு வருகிறது. பழம் பெரும் சமூகங்கள் தங்கள் முன்னோர்களின் இறைஞானங்களை மக்கள் நன்மைக்காக வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அறிவில்லா நவீன வணிகர்களுக்கு எதிரான போராட்டங்கள் மக்களிடம் உருவாக ஆரம்பித்து விட்டது. இயற்கையும் தன் பங்குக்கு மனித அறிவின் பெருமையைப் பொய்யாக்கி மனிதகுலத்துக்கு இயற்கையுடன் இயந்து வாழ்தலின் தேவையை உணர்த்திவிட்டது. தன்னால் விரும்பிய போது மனித அறிவால் ஏற்பட்ட இழப்புகளைச் சீர் செய்து கொள்ளமுடியும் என எல்லாவகைகளிலும் உணர்த்தி விட்டது.
 
இதையெல்லாம் பார்க்கும் போது இறைவன் – படைப்பாற்றல் மனித இனத்தின் மீது கருணை கொண்டு கடைசி வாய்ப்பளித்துள்ளதை உணர முடிகிறது.
 
மனிதன் தன்னையும் தன் குழந்தைகளையும், நாம் வாழும் சூழலையும் பாதுகாக்க வழிவகைளைப் பற்றி சிந்திக்க வேண்டும். தன்னைப்போல சிந்திப்பவர்களை அடையாளம் காண வேண்டும். தனது முன்னோரின் இறைஞானங்களைத் தகுதியுள்ளோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு நன்மையை நாடும் நல்ல மனிதர்கள் எண்ணிக்கையும், வலிமையும், எந்த தலைவர்களிடமும் ஏமாறாத விழிப்புணர்வும் வேண்டும்.
 
தனது நன்மையை நாடி, இறையச்சத்துடன் மரபுவழி நலவாழ்வு மையங்கள் இந்தப் பணியை செய்யும் – செய்ய விரும்புபவர்களுக்கு துணையாக இருக்கும்.
 
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி  (93458 12080)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.