வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

சுகமாகும் நோய்கள் அனுபவ பகிர்வு பெருங்குடல் நோய்கள் – மலச்சிக்கல், அதிக மலம் கழிதல், வயிற்றுக் கடுப்பு, வயிற்றலைச்சல், மூலம், பவுத்தரம்

பெருங்குடல் நோய்கள் – மலச்சிக்கல், அதிக மலம் கழிதல், வயிற்றுக் கடுப்பு, வயிற்றலைச்சல், மூலம், பவுத்தரம்[n1] 

நண்பர் ஹைதர் ஒருநாள் தனது வீட்டுக்கு விருந்தினராக வந்துள்ளவர்களின் 5 வயது குழந்தைக்கு உடல் நலமில்லாமல் இருப்பதாக கூறி அழைத்தார்.
அந்த பெண் குழந்தை கடந்த 4 நாட்களாக மலம் கழிக்காமல் இருப்பதாகவும் அதனால் மனம் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். விசாரித்ததில் அடிக்கடி இது போலாகும் என்றும் ஆசனவாயில் ஆங்கில மருந்து குச்சியை வைத்து தான் மலம் கழிக்கச் செய்வதாகவும் கூறினர். இந்த முறை அவ்வாறு செய்து பாரத்தும் வரவில்லை என்றனர்.

நாடி பார்த்ததில், பெருங்குடல் மட்டுமின்றி அனைத்து உடல் கருவிகளும் பலவீனமாய் உள்ளது அறிந்தேன். இரண்டாவதாக ஆசனவாய் புண்ணாகி இருந்ததால் வலி எரிச்சல் காரணமாக மலம் கழிக்காமல் இறுக்கிக் கொள்கிறாள் எனத் தெரிந்தது. தூக்கம் இல்லை என்பதால் உடல் கடுமையான சூடாக இருந்தது.

அந்த குழந்தையின் தம்பிக்கும் உடல் தொல்லைகள் இருந்ததால் அவர்களது அன்றாட வாழ்க்கை முறையை விசாரித்தேன். அவர்கள் துபாய் நகரத்தில் வாழ்கிறார்கள். இரவு உணவை 1மணிக்கு மேல் கடைகளில் உண்டுவிட்டு இரவு 3 மணிக்குத் தான் வீட்டுக்கு வந்து உறங்குவது பழக்கமாம். பகல் 12 மணிக்கு மேல் தான் விழிப்பது அந்த குழந்தைகளுக்கும், தாய்க்கும் பழக்கமாம். தந்தை காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை வேலைக்கு சென்று வருகிறார். அவர் தூங்க கிடைக்கும் நேரம் 3 மணி நேரம் தான்.

இது போன்ற முறையற்ற வாழ்க்கை பழக்கங்களால் துன்பமடைபவர்களின் எண்ணிக்கை இப்போழுது அதிகரித்துள்ளது. அவர்களில் பலர் தங்கள் உடல் துன்பங்களால் மனம் வருந்தி, அத் துன்பங்களுக்கு காரணம் தனது பழக்க வழக்கங்கள் தான் என உணருவதற்குள் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.
கண்ட மருந்துகளையும் சாப்பிட்டுக் கொண்டே அதனால் வரும் பக்கவிளைவுகளையும் சேர்த்து அனுபவித்துக் கொண்டே துன்பத்தில் உழல்கிறார்கள். பிழைப்புக்காக வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமும், மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களிடமும் இந்நிலை அதிகம் காணப்படுகிறது. மறுபுறம் அதிக வருவாய்க்காக ஆசைப்பட்டு இரவுப் பணிகளில் தன்னை இழக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையைச் சார்ந்த இளைஞர்கள், மற்றும் சுழற்சி முறை வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வும் இதே நிலைதான். பெரும் பதவியில் இருப்பவர்கள் நிலையோ மிக துன்பமானது.

இவர்கள் எல்லோர்க்குமே பெருங்குடல் சார்ந்த நோய்கள் இருக்கும். காரணம் முறையற்ற உணவு நேரம் வயிறை பாதிக்கிறது வயிற்றிலிருந்து சக்தி பெறும் பெருங்குடல் பலவீனமாகிறது. காலைக்கடன்களை காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் முடிக்காவிட்டால் பெருங்குடலுடன் சேர்ந்து பிற உடற்கருவிகளும் பாதிக்கப்படும்.

இந்த பழக்க வழக்கங்களை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டும். உடனடியாக மாற்ற முடியாதவர்களுக்கு- சரி செய்ய என்ன வழி?

இரவு தூங்க முடியாவிட்டால் உடல் அதிக சூடாகும் இது தணிய நாளும் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு தலைகுளிர குளிக்க வேண்டும். கால் பெருவிரல் நகங்களில் ஆமணக்கு எண்ணெய் பூசிக் கொள்ளவேண்டும். உணவில் கரும்பில் எடுக்கும் வெள்ளைச் சர்க்கரையை நீக்கிவிட்டு பனைவெல்லம் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.கோழி, இட்லி, தோசை, சாம்பார்[n2]  மற்றும் கசப்பு, புளிப்பு தன்மையுள்ள உணவுகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
இரவு 2 மணிக்குமேல் படுப்பவரானாலும் காலைக்கடன்களை காலை 7 மணிக்குள் முடித்துவிட்டு பின் 9 மணிக்கு மேல் பகலில் தூங்கலாம்.








மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பப்பாளி, அத்திப்பழம், மாதுளம் பழம், அன்னாசிப்பழம் போன்றவைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மூலநோய், பவுத்திர நோய் [n3] ஏற்படாமல் இருக்க பிடிகருணைக் கிழங்கை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்க. மோர் அதிகம் உணவில் சேர்க்கவும்.

சமையலில் பருப்பை வேகவைக்கும் போது சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு வேகவைத்தால் மலச்சிக்கல் [n4] ஏற்படாது உணவும் சுவையாகும். மேலும் காரக் குழம்பு கொதிக்க வைக்கும் போது சிறிது சுக்குத்தூள்[n5]  அத்துடன் சேர்த்துக்கொள்க. பச்சை மிளகாய் சேர்க்காது காரத்துக்காக மிளகு [n6] அதிகம் பயன்படுத்துக.

வெளியில் காற்றில் பதத்துப்போகும் உணவுகளைத் தவிர்க்கவும் உதாரணம்; முறுக்கு, பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனி[n7] களைத் தவிர்க்கவும். பதிலாக நன்கு பழுத்த இனிப்பான பழங்களைச் சேர்த்துக் கொள்க. பழங்களை நேரடியாக சுவைத்துச் சாப்பிடுதல் நன்று.
மனதை இறுக்கமற்றதாக [n8] வைக்க எளிய விபாசனா[n9]  போன்ற தியான முறைகளை கற்றுக் கொள்க.



உடல் நலத்துக்கான விபரங்களை விரித்துக் கூறி பின் குணமளிக்கும் இறைவழி மருத்துவத்தால் உடல் மனத் தொல்லைகளை குறைத்துவிட்டு, தொடர்ந்து சாப்பிட அந்த குழந்தைக்கு கொடுத்த மலர் சாரங்கள்;
அமுதம் பெருக்கி- நஞ்சை நீக்கும், சீரணத்தை முறைப்படுத்தும், மலமிளக்கியாகும்.
பொண்ணாவாரை- மலமிளக்கி,
வெண்தாமரை குறிஞ்சி- நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ள உதவும். மன அமைதி தரும்,
ரோஜா- தூக்கத்தை தரும். வயிற்றுப் புண்ணை ஆற்றும், சுகம் தரும்.
சடாமன்சில்- மன அமைதிக்கு, தூக்கத்துக்கு, நரம்புகளை அமைதியாக்க.

அவர்கள் உடல் நலத்துக்கான பழக்கங்களை சீராக்கிக் கொண்ட அளவில் விரைவாக உடல் நலமடைந்தார்கள்.

மீண்டும் சுகமாகும் நோய்கள் தொடர்ந்து பகிர்வோம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி-93458 12080
thamizhavel.n@gmail.com







 [n1]21 வகையான மூலநோய்கள்


 1. நீர் மூலம்:- தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.

2. செண்டு மூலம்:- ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும்.  

இவைகள் குணமாக முள்ளிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும்.
 (
தியாகராசன், பதி, 1876:142)

3 முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.                                           

4. சிற்று மூலம்.  ஆசன்ப்பகுதியில் சிறுமுளைகள் உண்டாகும்.                  

5. வறள் மூலம். அதிக வெப்பத்தாள்   உடல் உலர்ந்து ஆசனவாயினின்று இரத்தம் வெளிப்படும். வாழப் பழத்தில் சீரகப் பொடிஉஐக் கலந்து உண்டுவரக் குணமாகும்.       

6.இரத்த மூலம். ஆசன வாயிலிருந்து இரத்தம் வெளிப்பட்டுச் சோகையினால் கண்கள் மஞ்சளாகத் தோன்றும்/ வாழைப்பழச் சாற்றில் சீரகப் பொடியைக் கலந்துண்ணச் சரியாகும்.

7.சீழ் மூலம். உடல் வெளுத்து ஆசனவாயிலிருந்து சீழூம் நீரும் வெளிப்படும்.

8. ஆழிமூலம். ஆசனவாயில் வள்ளிக்கிழங்குபோல் ஒருமுளைதோன்றிச் சீழும் இரத்தமும் வெளிப்படும்.

9. வாதமூலம். ஆசனவாயில் வாதுகைப் பூ போன்ற முளை வளர்ந்து குடல் வலி, தலைவலி ஆகியவற்றுடன் வெண்மையான மலம் வெளிப்படும்.

10. தமரக மூலம். ஆசன வாயில் தாமரைப்பூ போன்று தோன்றி இரத்தம் வெளிப்படும்.                

11. ஆசன வாயில் நெல் அல்லது பருத்து விதை போன்ற முளை உண்டாகி மலகம் இறுகி இரத்தத்துடன் சிறிது சிறிதாக வெளிப்படும்.

12. சிலேத்தும மூலம். உடல் வெளுத்து ஆசனவாயில் வெண்மையான முளை தோன்றும். 

13. தொந்த மூலம். ஆசனவாய் குறுகிச் சிவந்து விரிந்து முளை தோன்றும் 

14. வினைமூலம். உணவு செரிக்காமல் அடி வயிற்றில் வலி ஏற்படும்.  புளியங்கொட்டையின் மேல்தோலை அரைத்துப் ப்பசுவின் பாலில் ஐந்து நாள் கொடுக்கக் குணமாகும்.

15.மேக மூலம். ஆசனவாயிலிருந்த்கு இரத்தமும், சிறுநீரில் சர்க்கரையும், வெளிப்படும். வட்டத் துத்தியிலைச் சாற்றை நல்லெண்ணெயில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

16. பவுத்திர மூலம். ஆசனவாயில் கட்டி உண்டாகி சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.  

17. கிரந்தி மூலம். மலம் வறண்டு இரத்தத்துடன் ஆசனவாய் வெடிக்கும்படி வெளியேறும். ஈருள்ளிச்சாறு, பசுவின்பால், ந்ய் ஆகியவற்றில் அதிமட்குரத்தக் கலந்து கொடுக்கக் குணமாகும்.

18. குத மூலம். ஆசன வாயில் மூங்க்லில் குருத்துப்போல ஒரு முளை வெளிப்பட்டு இரத்தம் வெளியாகும்   

19. புற மூலம். ஆசன வாயில் சீழும் பருப்புப் போனேஅ முளையும் உடலெங்கும் சிறங்கும் தோன்றும்.

20.கருக்கு மூலம். மலவாய் சுருங்கி, உடல்வெளுத்துக் குடல்வலியுடன் இரத்தமும் சீழும் வெளிஒப்படும்.

21.சவ்வு மூலம். அடிவயிற்றில் மூலம் மிகுதியாகி ஆசன வாயில் சவ்வுபோலச் சுற்றிச் சீழும் நீரும் கசியும்.  ( முல்லை. பி.எல். 1990 : 38 ) 

ஆவாரங்கொழுந்து , பூ, பட்டை, அறுகம் வேர் இவைகளைச் சம அளவில் எடுத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து  பசுவின் நெய்யில் 48  நாட்கள் உட்கொள்ள ஆசனவாயுள் கரைந்துபோகுஇம். 


குறிப்பு:- 

 மேற்குறிப்பிடப்பட்டுள்ள 21 வகை மூலநோய்களுக்கும் தனித்தனியான மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், கட்டுரையின் சுருக்கம் கருதி எளிமையான சில முறைகள் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளன.

மூல நோய்க்குரிய பொதுவான சில மருந்துகள்.

பிரண்டைக் கொளுந்தை அல்லது நாயுருவி இலையை அரைத்தது நல்லெண்ணெயைக் கலந்து ஏழு நாட்கள் இருமுறை உட்கொள்ள மூல நோய் குணமாகும்


 [n2] சாம்பார் மேலே ஒரு சுவையும் நடுவில் ஒரு சுவையும் கடைசியில் சாப்பிடுபவர்க்கு ஒரு சுவையும் தரும் காரணம் அது குழம்பாக இல்லாமல் அதிக நீர் சேர்க்கப்படுவதால் பருப்பு வாயுத் தொல்லைகளை உருவாக்க காரணமாகிறது. சாம்பாரை விரும்புவோர் பருப்பை வேகவைக்கும் போதே சிறிது ஆமணக்கு எண்ணெய் சேர்த்தால் நலம்.


 [n3]உள் மூலமானது முதிர்ந்து பவுத்திரமாக மாறுகிறது. ”பவுத்” என்ற வட சொல்லுக்குத் துளை என்பது பொருள். பவுத்திர நோய் தோன்றுகையில் ஆசனத் துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறிசிறு துளைகள் தோன்றி அதனின்று நாற்றமுள்ள நீர் வெளிவரும்.

இதற்குரிய மருத்துவம் செய்யாவிடில் ஆசனத் துளையின் உட்புறம் சவ்வு போலவும், பலூன் போலவும், ஏராளமாகச் சதை வளர்ச்சி தோன்றி அவற்றில் துளைகள் ஏற்படும். பிறகு ஆசனத் துளை அருகில் வலியற்ற ஒரு கொப்புளம் ஏற்படும். இது நாட்பட்ட நிலையில் உடைந்து வெளியேறும். மீண்டும் இது கொப்புளமாக மாறும். பவுத்திர நோய் முதிர்ந்த நிலையில் இத்துளை வழியாகச் சீழுடன் இரத்தமும் வெளிப்படும்


 [n4]பெருங்குடலில் ஏற்படும் சக்தி குறைவால் வரும். ஆசனவாய்ப் பகுதி அதிக சூட்டால் விரிவடைந்து அடைத்துக் கொள்ளும் போதும் மலம் வெளியேறுவது கடினம். வலியின் காரணமாக மலத்தை அடக்குவதாலும் மலச்சிக்கல் வரலாம். கழிக்கும் தொட்டியில் நன்கு ஒட்டும் நிலையில் மலம் இருப்பின் மலச்சிக்கல் உள்ளதென அறியலாம்.


 [n5]வளி நோய்களை நீக்குவதுடன் சீரணத்துக்கு உதவும்.
சுக்கின் தோல் நஞ்சு அதைநீக்கி சுண்ணாம்பை பூசி வெயிலில் காயவைத்து பின் சுண்ணாம்பைத் தட்டி நீக்கிவிட்ட பொடிசெய்து வைத்துக் கொள்க.


 [n6]மிளகு குளிர்ச்சி தரும். நஞ்சை முறிக்கும். சளி நீக்கும். வலி நீக்கும்.


 [n7]பெருங்குடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சிக் கொள்வதோடு பசை பெருங்குடலின் சுவர்களில் ஒட்டிக் கொண்டு அதன் இயக்கத்துகுத் தடையாகும்.


 [n8]மன இறுக்கம் மலச்சிக்கலை உருவாக்கும்,


 [n9]புத்தரின் தியான முறைகளில் ஒன்று. எதையும் சாராது மையத்தில் இருக்க உதவும் முறை. விழிப்புணர்வுடன் கவனிக்கும் தன்மையை அளிக்கும் இந்த பயிற்சி.
தினமும் அமைதியாக வசதியாக அமர்ந்து மூச்சை கவணித்தல் வேண்டும். மூச்சை கூட்டவோ, குறைக்கவோ, அடக்கவோ செய்யாது வெறுமனே கவனிக்கும் பயிற்சி. இவ்வாறு பயின்றவர் எல்லாவற்றையும் தன் மையத்திலிருந்து சலனமின்றி கவனிக்க கற்கிறார். 

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

கண்களுக்கு நத்தைசூரி - மலர் சாரம்

நத்தைசூரி - மலர் சாரங்களின் சிறப்புத் தன்மை

நேற்று  எனக்கு தமிழக மலர்களின் சாரங்களின் குணமளிக்கும் தன்மையை அறிமுகப்படுத்திய ஆராய்ச்சியாளர் திரு. நாகலிங்கம் அய்யாவுடன் மலர்கள் சேகரிக்க மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தேன். மலர்களைச் சேகரித்து விட்டு திரும்பும் வழியில் அவருடன் பேசுவதற்கு வசதியாக எனது தலைக் கவசத்தை கழற்றி விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

                                         மூலிகை மலர் ஆராய்ச்சியாளர் ச. நாகலிங்கம் 
  மூலிகை மலர் ஆராய்ச்சியாளர் ச. நாகலிங்கம் ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர். 15 ஆண்டுகளுக்கும் மேல் தமிழக மலர் சாரங்களைப் பற்றிய ஆய்வுகளில் இருப்பவர். மிகப் பலரை, பல கடும் நோய்களில் இருந்தும் தாம் கண்டுணர்ந்த தமிழக மலர்ச்சாரங்களைப் பயன்படுத்தி முழுமையாக குணமளித்துள்ளார். குணமளிக்கும் சித்தவித்தை அறிந்தவர். பலன் கருதாது பல குணமளிப்பவர்களை உருவாக்கிய ஆசான்.

முன்னால் போய்க் கொண்டிருந்த வாகனம் சிமிண்ட் கலவை கருவியை சுமந்து கொண்டு சென்றது அதிலிருந்து விழுந்த மண் எனது வலது கண்ணில் பட்டது. கடுமையான வலியும், எரிச்சலும், உறுத்தலுமாக எனது கண்களைத் திறக்க முடியாது போனது. வண்டியை எப்படியோ சமாளித்து சாலைஓரம் நிறுத்தினேன்.

கண்களில் இருந்த வலியும் உறுத்தலும் அதிகமாக உணர்ந்தேன். என்னிடம் இருந்த பையில் என்ன மருந்து உள்ளது என நினைத்துப் பாரத்தேன். அதே நேரம் மனம் முன்தினம் செய்த நத்தைசூரி மலர் சாரம் இருந்ததையும், மலர் சாரத்தை சோதனைக்காக சாப்பிட்ட எனது மகன்  நரசிம்ம பாரதி கண்கள் குளிர்ச்சியாக இருந்ததாகக் கூறியதை நினைத்தது.மேலும் நத்தை சூரிக்கான வேறு பெயர் குழிமீட்டான் என்பதும் ஞாபகம் வந்தது.

                                                                 நத்தை சூரி
நாகலிங்கம் அய்யாவின் உதவியுடம் பையிலிருந்து மருந்தை எடுத்து இரண்டு சொட்டுகள் நாக்கில் விட்டேன்; உடன் கண் வலி குறைந்து கண்களைத் திறக்க முடிந்தது, கண்களில் நீர் அதிகம் சுரந்து மண் வெளியேற ஆரம்பித்தது ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் இரண்டு துளி சாப்பிட்டேன். நன்றாக வலி குறைந்தது. ஆனாலும், கண்களுக்குள் சிறிது மண் இன்னும் இருப்பதை உணர்ந்தேன். அய்யாவை வண்டி ஓட்டுவதாக கூறினார், நான் பின்னால் அமர்ந்து வந்தேன்.

அரைமணி நேர பயணத்துக்குப் பின் அவரது வீட்டுக்கு வந்தோம். வழியில் லேசான உறுத்தல் தவிர கண்ணில் எந்த தொல்லையும் இல்லை. ஆனால், மண் துகள்கள்  சிறிது உள்ளே இருந்ததை உணரமுடிந்தது. கண்கள் சுகமான வேகத்தைப் பார்த்து நாகலிங்கம் அய்யா தூசிகளில் வேலை பார்ப்பவர்கள்  இரு துளி  ந த்தை சூரி மலர் சாரத்தை தண்ணீரில் கலந்து கண்குவளைகளின் மூலம் கண்ணை கழுவலாமே என்றார். அவரை வீட்டில் இறக்கி விட்ட பின் எனது மனம் அதை உடனே செய்து விடலாமே என நினைத்தது. நான் நேரடியாக இரு துளி மலர் சாரத்தை கண்ணைமூடிக் கொண்டு இமைகளின் மீது பூசினேன். வினாடிகளில் உறுத்தல் சரியாகிவிட்டது. மேலும் ஐம்பது கிலோமீட்டர் வண்டிஓட்டிக்கொண்டு வீடு போய் சேரும் போது மலர் சாரம் பூசிய கண் பார்வை இடது கண்ணை விட நன்கு தெளிவாக இருந்ததை உணர முடிந்தது.



மனதில், எனக்கு அருமையான குணமளிக்கும் முறையை கற்றுத்தந்த நாகலிங்கம் அய்யா மற்றும் நம் முன்னோர்களுக்கு நன்றி கூறினேன்.

தொடர்ந்து மலர் சாரங்களின் சிறப்பை பகிர்வோம்.

அன்பை மறவா, 
தமிழவேள் நளபதி

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சுகமாகும் நோய்கள் அனுபவ பகிர்வு-நுரையீரல் நோய்கள்- இளைப்பு, இரைப்பு, காசம், வரட்டிருமல், விடாத தொடர் தும்மல், தோல் நோய்கள்

நுரையீரல் நோய்கள்- இளைப்பு, இரைப்பு, காசம், வரட்டிருமல், விடாத தொடர் தும்மல், தோல் நோய்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரிஷி எனும் ஒருவர் தன் மனைவி, மகளுடன் வந்தார். தனது காலில் பாதங்களின் மேல்புறத்திலுருந்து முழங்கால்களின் அடிப்புறம் வரை நிறம் கருப்பாக மாறியிருந்ததையும், அரிப்பாகவும், நீர் வடியும் புண்ணாகவும் சில பகுதிகள் இருப்பதையும் காட்டினார். மேலும் கடும் முதுகு வலியாலும் அவதிப்பட்டார்.

 அரிப்பு குறையும் காலத்தில் மூச்சுத்திணரலுடன் கூடிய இரைப்பு அதிகமாவதாக கூறினார்.

 இது நுரையீரல் மற்றும் மண்ணீரல், சிறுநீரகங்களின் பலவீனத்தால் வருவது. பரபரப்புணர்வால் நுரையீரல் பாதிக்கப்படும். அதீத கவனத்தால் மண்ணீரல் பாதிக்கும். பயத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.

 இவருக்கு இது வந்த காரணம், இவரது வேலை; பகல் முழுவதும் சிறிய மோட்டார் சைக்கிளில் வெயிலில் சுற்றி கடைகளுக்கு இவர் வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்களை வினியோகிப்பது - இரவில் தின்பண்டங்களைச் செய்து கட்டுவது.


தனக்கு முடியாமல் படுத்துவிட்டால், குடும்ப வருமானத்தில் பாதிப்பு வந்துவிடுமோ எனும் பயம் இவரது சிறுநீரகங்களை பாதித்தது. 

சுவைக்காமல் சாப்பிடுவது, வேலையில் அதீத கவனம், இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவது, இட்லி தோசை போன்ற உணவுகளையே வேலைச் சுருக்கத்துக்காக தினம் காலையும், இரவும் சாப்பிடுவது போன்றவை மண்ணீரல் பலவீனத்துக்கு காரணமாகியது.


இவரது மனைவி கர்ப்ப பை கோளாறுகளாலும், தலைவலி, கடும் தோள்பட்டை வலி, மலச்சிக்கல், கடும் சளியாலும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கால்களில் நீர்த் தேக்கத்தினால் வீக்கம் இருந்தது.

காரணம்; தலைக்கு குளிக்காமல் உடலுக்கு மட்டும் நீர் ஊற்றிக் கொள்வது இவரது அனைத்து உடல் கருவிகளையும் பாதித்து தலை நீரேற்றத்துக்கு காரணமானது.

 வேலை பார்க்கும் போது ஒருபக்கம் அதிக அழுத்தம் கொடுத்ததால் கைவலி அதிகம் ஆனது. உணவுப்பழக்கம், இரவு அதிகநேரம் விழிப்பது போன்றவை மலச்சிக்கல், வயிற்று வலி, மற்றும் கர்ப்ப பை கோளாறுகளுக்கு காரணமானது.

இவர்கள் மகள் நாளும் காலை எழுந்ததும் தொடர் தும்மல்களால் பாதிக்கப்பட்டிருந்தார். கடுமையான தலைவலி, ஏற்கனவே இதய நோய்க்காக ஆங்கில மருத்துவத்தில் மார்பிலிருந்து வயிறுவரை அறுவை செய்யப்பட்டிருந்தது.

 அதிக கோபம், படபடப்பு, தினமும் பள்ளியில் உடன் படிப்பவர்களுடன் சண்டை, கைகால் வலி, சிறுநீர்ப் பையில் கற்கள், மூலம், மலச்சிக்கல், உடல் எரிச்சல், கைகால் வலி என பல தொல்லைகள்.

 ஆனால், அந்த சிறுமி, தான் அப்போது படித்துவந்த 10 வகுப்புத் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண் வாங்க வேண்டும் என தன் விருப்பத்தை கூறி, கடுமையாக உழைத்துப் படித்தாலும் தேர்வு நேரத்தில் மறந்து விடுகிறது என்று கூறி அதை சரிசெய்ய வேண்டுமென்றாள்.

காரணம் இரவு 2 மணிவரை விழித்துப் படித்தது இதய உறை, முக்குழிவெப்ப பாதை, பித்தப்பை, கல்லீரல் போன்றவற்றை பலவீனமாக்கியிருந்தாள். இதனால் உடல் அதிக வெப்பமடைந்து தசை சோர்வும், மன, உடல் எரிச்சலும், ஞாபக மறதியும் அதிகமாகியிருந்தன. 

இவற்றுக்கு அவ்வப்போது எடுத்த எதிர்முறைய மருத்துவம்[n1]  தொல்லைகளை அதிகமாக்கியிருந்தது. இதனால் நுரையீரலும், பெருங்குடலும் பாதிக்கப்பட்டு இருந்தது. குளியல் மற்றும் உணவுப்பழக்கம் சீரில்லாததால் வெட்டைத் தன்மையும் இவளது பெற்றோரைப்போல் இவளும் பாதிக்கப்பட்டிருந்தாள்.

முதலில் இவர்கள் மூவருக்கும் அவர்களது உடல் துன்பத்துக்கு காரணத்தை விளக்கி புரியவைத்தேன். பிறகு சித்தர்களின் குணமளிக்கும் முறையில் இறைவழிமருத்துவம்[n2]  மூலம் அவர்களின் வலிகளையும், மனச் சோர்வையும் நீக்கினேன்.

வலிநீங்கி புத்துணர்வும், நோய்கள் நீங்கி வாழ இறையாற்றலிடம் நன்றியுணர்வும், இறைவழிபாடு எனும் நமது அடிப்படைத் தேவைகளை விருப்பத்துடனும், இறையச்சத்துடனும் சுவைத்தால் நன்மையுண்டாகும் என்ற மனத்தெளிவும் பெற்றார்கள்.

அந்த சிறுமியை இரவு 7 மணிக்கு மேல் படிக்க வேண்டாம்-கண்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் இரவில் 8 மணிக்குள் தூங்கி பின் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிக்கும் படி கூறினேன். 

மூவரையும் காலையிலும் இரவிலும் உணவுக்கு முன் நன்கு குளிர தலைக்கு குளிக்கும் படி கூறினேன். 8 மணிக்குள் உணவை முடித்துக்கொள்ள சொன்னேன். 

சுவைத்து உண்ணுவதின் சிறப்பை – தேவையை கூறினேன்.

நான் அவ்வப்போது இவர்கள் உடலில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களுக்கு ஏற்ப குணமளிக்கும் மலர்களின் சாரத்தை பயன்படுத்தினேன். அவை,
 செம்பரத்தை மலர் சாரம் - கல்லீரல், பித்தப்பை, இதயம் முதலியவற்றில் வேலை செய்து, உடல் மன எரிச்சலை நீக்கும், மன துணிவைக் கொடுக்கும். இதய நோய்களை நீக்கி வலு சேர்க்கும்.

அசோகா மலர் சாரம் – கரப்ப பை சார்ந்த அனைத்து நோய்களையும் நீக்கி வலுவாக்கும்.

சீந்தில் –பவளம் சாரம் – நுரையீரலை தூய்மையாக்கி வலுப்படுத்தும். மண்ணீரலை வலுப்படுத்தும்.வேலிப்பருத்தியும், பிரண்டை உப்பும் வயிற்றுத் தொல்லைகளை, வாய்வுத் தொல்லைகளை நீக்கும்.

நிலவாகை மலர் சாரம் – மலக் கட்டை நீக்கும், தோல் நோய்களை தீர்க்கும்.
வெண்தாமரை குறிஞ்சி சாரம் - கல்வி ஞானத்தை உண்டாக்கும், நுரையீரல், இதயத்தில் வலு சேர்க்கும்.

அவர்கள் தங்கள் உடலுக்கு ஏற்புடையவழியில் தங்களை மாற்றிக் கொண்டதற்கேற்ப விரைவில் நலம் பெற்றார்கள்.

 அந்த பெண்ணும் தனது பள்ளியில் முதல் மாணவியாக நல்ல மதிப்பெண் பெற்று தேறினாள். 

மற்ற மாணவிகளுடன் இருந்த சண்டைகளெல்லாம் தீர்ந்து தனது அடுத்த பிறந்த நாளில் பல தோழிகளுடன் கொண்டாடும் போது இதை கூறி வியந்தாள்.

மீண்டும் சுகமாகும் நோய்கள் தொடர்ந்து பகிர்வோம்.

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
கைபேசி-93458 12080
thamizhavel.n@gmail.com






 [n1]அலோபதி மருத்துவம். இது உயிராற்றலுக்கு எதிரானது. உடலில் நோய்கள் வருவதற்கு காரணம் அறியாமல் அவற்றுடன் போராடி வாழ்நாள் முழுவதும் நோய்களைத் தக்கவைக்கவும் அதிகரிக்கவும் உதவுவது. குணமளித்தல் எனும் நிறைவின்றி சிகிச்சை எனும் நிலையிலேயே வைத்திருப்பது.



 [n2]தன்னில் பிறரைக்காணும் சித்தர்களின் முறை. எண்ணங்கள் மூலம் இறையாற்றலுடன் தொடர்பு கொண்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் குணம்பெறும் ஆற்றலைத் தூண்டி சுகமளிப்பது.
இது குணமளிப்பவர் மருத்துவர் எனும் நிலையிலிருந்து விலகி, இறையாற்றலை பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வது ஆகும்.