வியாழன், 5 ஜனவரி, 2012

உப்பையும் நஞ்சாக்குபவர் யார்?


வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?

First Published : 04 Jan 2012 03:18:25 AM IST


உப்பைப் பயன்படுத்தாத மக்கள் கூட்டம் உலகில் எங்கும் இல்லை.
உப்பைப்போல், அதையும்விடக் கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதும், இன்றியமையாததும் தண்ணீர்!ஆகவே, மருந்துபோன்ற ஒன்று எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் கட்டாயம் அரசுக்கு இருக்குமானால் ஒன்று அதைத் தண்ணீர் விநியோகத்தில் கலந்து செலுத்தவேண்டும் அல்லது உப்பில் கலந்து செலுத்தவேண்டும்.


ஒவ்வொருவரும் குடிக்கின்ற தண்ணீர் முற்ற முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால், எல்லா மக்களும் பயன்படுத்துகிற உப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டுவர முடியும்!
அயோடின்போன்ற இன்றியமையாப் பொருளை இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டுசேர்க்க உப்பைக் கருவியாக்கி அதில் கலக்குமாறு சட்டம் செய்தனர் மத்திய அரசினர்.
இதைத் தென்னாட்டுக்கும் செய்தது அறிவுடைய செயல்தானா என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்!


சிலருக்குக் கழுத்தில் கல்போன்ற கடினத்தன்மையுடன்கூடிய கட்டியோடு கழுத்து வீங்கித் தொங்கும்; கைகள் நடுங்கும்; கண்கள் துயில மறுக்கும். அதோடு மட்டுமல்ல; கண்கள் வெளியே தள்ளிக்கொண்டு வந்துவிடும்.
யார்யாருக்கும் பசிப்பது நியாயம். ஆனால், சாப்பிடச் சாப்பிடப் பசி அடங்காது என்பது கொடுமை அல்லவா? சாப்பிடுவதையே வேலையாகக் கொண்டவனும் எடை குறைந்து 70 கிலோ, 40 கிலோவாகிக் கரைந்து தென்னை விளக்குமாற்றுக் குச்சிபோல் ஆகிவிடுவான்!
சிலருக்குக் குரல் மாறிவிடும்! சிலருக்குக் குரலே போய்விடும்! கழுத்தினுள்ளே குரல்வளையில் உள்ள நாண்கள் விரிந்து ஒன்றோடொன்று ஒட்டுவதால் பேச்சு வருகிறது. தைராய்டு முற்றிப் புற்றாக மாறிய நோயாளிகளுக்குக் காற்றுதான் வரும்!


தைராய்டு சுரப்பியில் கோளாறு உள்ளவர்கள் இந்த நோய்க்கு ஆட்படுகிறார்கள். இந்த நோய் ஆண்களைவிடவும் பெண்களுக்கு மிகுதியாய் இருக்கிறது.


தைராய்டு என்பது ஒரு நாளமில்லாச் சுரப்பி! இந்த நாளமில்லாச் சுரப்பியின் சுரப்புக் குறைபாடு ஹைப்போ தைராய்ட் என்னும் நிலை ஒரு கருவுற்ற பெண்ணுக்கு இருக்குமானால், அவள் வயிற்றிலுள்ள குழந்தை அதன் தாக்கம் பெற்றுப் பிறந்து வளர்கையில் மந்தத்தன்மையுடன் வளரும்! மூளை வளர்ச்சி குன்றி இருக்கும்! நினைவுத்திறன் ஏறத்தாழ இருக்காது!


எந்தத் தாயும் வயிற்றிலிருக்கும் குழந்தையின் தேவைக்கேற்பத் தன் உணவை மாற்றிக் கொள்வாள்! வயிற்றுப் பிள்ளைக்குக் கேடுவரும் என்றால் அதற்குக் காரணமான எதையும் தவிர்த்துவிடுவாள்!


அவ்வளவு பொறுப்பான தன்னலமற்ற தாயும் தான் கருவுற்றிருக்கும்போது தனக்கிருக்கும் அயோடின் குறைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இவள் காக்கத் தவறிய இடத்தில் பிள்ளையின் நலத்தைக் காப்பதாகச் சொல்லிக்கொண்டு மத்திய அரசு நுழைந்தது.


கருவுற்ற தாய்க்கு உள்ள அயோடின் குறைபாடு, அதனால் பிள்ளைக்குப் பாதிப்பு என்பது நடைமுறையில் மிகமிகக் குறைவானது. இதற்காக நாடு தழுவி அயோடின் உப்பைக் கட்டாயமாக்கி இருக்க வேண்டியதில்லை.
அயோடின் என்பது மிக இன்றியமையாததுதான்! இதன் குறைபாடு பத்தாயிரத்தில் ஒரு தாய்க்கு மட்டுமே இருப்பதாக சென்னை, அரசு தலைமை மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி அறுவைத் துறையின் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் கூறுகிறார்.


எந்த ஒரு தாய்க்கு இந்த அயோடின் குறைபாடு என்பதைக் கண்டறிந்து, அவளுக்கு அந்த அயோடினை ஊட்டுவதை விடுத்து, ஒவ்வொரு பத்தாயிரத்திலும் மீதமுள்ள 9999 கருவுற்ற, கருவுறாத, விலக்கு நின்றுபோன தாய்மார்களுக்கும் சேர்த்து அயோடின் கலந்த உப்பைக் கட்டாயமாக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்தது.


தாய்மார்கள் மட்டுமில்லை; தந்தைமார்கள், தனயன்மார்கள், மகன்மார்கள் என்று ஒவ்வோர் இந்தியனுக்கும், அவன் பாலகனாயினும், சிறானாயினும், இளையோனாயினும், முதியோனாயினும் யாராயினும், ஒவ்வொருவருக்கும் உப்பு என்பது சாதா உப்பில்லை; அயோடின் கலந்த உப்பே என்று மத்திய அரசு அறிவித்தது.


இந்தப் பணியினை மிதமிஞ்சிய உற்சாகத்தோடு செய்தவர் நம்முடைய திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐயா இராமதாஸின் மகன் மருத்துவர் சின்ன ஐயா அன்புமணி! அவர் அப்போது மத்திய அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தார்.


முன்பெல்லாம் உப்பு என்றாலே சாதா உப்புதான்! அது பெருவெட்டாக இருக்கும்; உப்பு என்றால் அதில் உப்புக் கரிப்பு இருக்கும். அது கலப்படமற்றது.
அரிசியில் கல்லைக் கலப்பார்கள்; மிளகில் பப்பாளி விதையைக் கலப்பார்கள்; பாலில் தண்ணீரைக் கலப்பார்கள்!


அதனால் நாம் ஒரு லிட்டரில் உள்ள அரை லிட்டர் தண்ணீருக்கும் பாலின் விலையே கொடுக்கிறோம். அரசியல்வாதியின் லஞ்சத்தால் எட்டு அங்குலத் தடிமன் இருக்க வேண்டிய சாலை நான்கு அங்குலமாக மெலிவுற்று விடுவதுபோல! எல்லாவற்றிலும் பாதிக்குப் பாதி களவு!


இவையெல்லாம் கலப்படச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவையே!


ஆனால், உப்பைக் கலப்படச் சட்டத்தின்கீழ் கொண்டுவந்தார்களே மத்திய அரசிலுள்ள அறிவாளிகள்! உப்பில் எதைக் கலப்படம் செய்யமுடியும்?
நம் தூத்துக்குடி உப்பளங்களெல்லாம் ஒரு காலகட்டத்தில் நிலைபெறுவதற்கே தவியாய்த் தவித்தன!


உப்பில் அயோடினைக் கலக்காவிட்டால், கலப்படச் சட்டத்தின்கீழ் தண்டனை என்றனர். கலந்தால் தண்டனை என்பதுபோய்க் கலக்காவிட்டால் தண்டனை என்னும் நிலை ஏற்பட்டது! இது காலவினோதம்தான்! இந்தச் சட்டத்துக்கு வேறு பெயர் சூட்டியிருக்கலாம்!


இப்போது முந்திய காலம்போல் அல்லாமல் சாதா உப்பாகிய பெருவெட்டு உப்பிலும் தண்டனை அச்சத்தால் அயோடின் கலக்கப்பட்டுவிடுவதால் நாடு முழுவதும் அயோடின் உப்பு மட்டுமே கிடைக்கிறது. சாதா உப்பு மருந்துக்கடையில் மாதிரிக்குக்கூடக் கிடைப்பதில்லை!


இது வடநாட்டுக்குத் தேவைதான்! மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ளோர், வடபகுதியினர் இவர்களுக்கெல்லாம் அயோடின் குறைபாடு இயற்கையாகவே இருக்கிறது. ஆகவே, இவர்களுக்கு அயோடின் கலந்த உப்புத் தேவையாக இருக்கிறது.
ஆனால், கடற்கரையோர மாநிலங்களுக்கு மண்ணிலேயே அயோடின் இருக்கிறது. கடலுணவில், குறிப்பாக மீன் போன்றவற்றில் மிகுதியாகவே அயோடின் உள்ளது. தென்னிந்தியாவில் அயோடின் குறைபாடு உள்ளதாக மெய்ப்பிக்கப்படவில்லை.


இங்கும் சிறிய அளவிலான மலைப்பகுதியினர்க்கு அது தேவையாக இருக்கலாம். மத்திய அரசினர் ஒழுங்காகச் சோதனை செய்யவே இல்லை! இவர்கள் அதீதமான இந்திய ஒருமைப்பாட்டுக் காதலர்கள். வடக்கு நோயுற்றால் தெற்கும் சேர்ந்து மருந்து சாப்பிட வேண்டும் என்னும் கொள்கையாளர்கள்!


தார்ப் பாலைவனத்தின் தாக்கம் பெறும் தில்லியில் டிசம்பர் மாதக் குளிர் 3 டிகிரி செல்சியஸ்; உதடு வெடிக்கும்! ஆனால், எதிலும் நிதானமான தமிழ்நாட்டில் குளிர் என்பதே 27 டிகிரிதான்! வடநாட்டுக் கம்பளியை நாம் போர்த்திக்கொண்டால் வெந்துவிட மாட்டோமா? பவானிப் பருத்திப் போர்வை நமக்குப் போதாதா?
நல்லவேளை! ஒரே மாதிரியாகத்தான் போர்த்திக் கொள்ளவேண்டும் என்று இதற்கும் மத்திய அரசினர் சட்டம் செய்யாமல் விட்டார்களே!
பழையகாலச் சாதா உப்பு நமக்குக் கிடைக்காததால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் என்ன?


நான்கு அயோடின் மூலக்கூறுகள் சேர்ந்ததுதான் ஒரு தைராக்சின். தைராக்சின் என்பது தைராய்டு சுரக்கும் இயக்குநீர். தைராக்சின் அளவோடு வெளிப்பட வேண்டும். அப்படி இருந்தால் அது நோயில்லை.
அது அளவுக்கு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் நோய்.
அது அளவில் குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்னும் நோய்.
அயோடின் கலந்த உப்பு மட்டுமே நம்முடைய சோற்றில், குழம்பில், ரசத்தில், மோரில், இட்லியில், தோசையில், நாம் உபரியாகத் தின்னும் முறுக்குவரையில் அனைத்திலும் மத்திய அரசின் சட்டத்தால் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சேர்ந்துகொண்டு வருவதால், உயர் நீதிபதிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், இந்தக் கட்டுரையை எழுதியவர், இந்தக் கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையினர், இந்த ஆராய்ச்சியைச் செய்த சென்னை, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர், செவிலியர்கள் மற்றும் தென்னிந்திய மக்களில் 35-ல் இருந்து 50 விழுக்காட்டினருக்கு அதிகப்படியான அயோடின் உப்பால் தைரோ டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் சிறிதளவாவது இருக்கும் என்கின்றனர்.
விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு அது கூடுதலாக இல்லை என்பது ஆறுதலுக்கு உரியதா? இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைத் தென்னிந்தியர்கள் தின்றால் முழுவீச்சில் நோய் தாக்கலாம்!
நமக்கு அந்த நோயின் கூறுகளை உருவாக்குவதற்கு மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?


அயோடின் என்பது 70 வயது வரை வாழும் ஓர் நபருக்கு ஒரு தேக்கரண்டி அளவே தேவை. அது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர வேண்டும்!
அயோடினைத் தவிர்த்த சாதா உப்பு என்பதையே நமக்குக் கிடைக்காமல் மத்திய அரசு சட்டம் போட்டுச் செய்துவிட்டதால், அதிகப்படியான அயோடினால் தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியே சிதைவுற்று விடுகிறது.


ஆகவே, தைராய்டிட்டிஸ் என்னும் நோயின் கூறுகள் 10-லிருந்து 17 வயதுவரை உள்ள இளையோருக்கு 35 விழுக்காடு உறுதியாக இருக்கிறது. 50 விழுக்காடாக இருந்தாலும் வியப்பதற்கில்லை என்கிறார் டாக்டர் சந்திரசேகர். ரத்தத்தைப் பரிசோதித்து இதை அறியலாம் என்கிறார். இந்த நோய்க்கூறுகளால் இளைய தலைமுறையின் அறிவு மந்தப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சுகிறார்.


மூன்று பிள்ளைகளில் ஒன்று அழிவதற்கு மத்திய அரசின் சொரணை இல்லாத தடித்த தன்மைதானே காரணம்! அந்த ஒரு பிள்ளை நம்முடைய மகனாகவோ, மகளாகவோ இருந்தால்தான் நமக்கு உறைக்குமா?


ஜுவனைல் ஆட்டோ இம்யூன் தைராடிட்டிஸ் என்பது மத்திய அரசின் கொடையால் கிடைக்கும் அயோடின் கலந்த உப்பால் சிறு குழந்தைகளுக்கு வரும் நோய்!


அளவுக்கு மிஞ்சிய அயோடின், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பியைச் சிதைத்துவிடுவதால், சிதைவுற்ற செல்கள் ரத்தத்தில் கலந்துவிடுகின்றன உடனே நம் உடம்பிலுள்ள போலீஸ்காரனான இம்யூன் சிஸ்டம், ""எவனோ திருடன் வருகிறான்'' என்று தைராய்டு செல்லுக்கு எதிரான ஆன்ட்டி பாடீஸ்- உற்பத்தி செய்துவிடுகிறது


ஆன்ட்டி பாடீஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் தைராய்டை அழித்துவிடும். முழுவதும் அழித்துவிட்டால் தைராய்டு இயக்குநீருக்கான மாத்திரையை நாம் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!
இந்த நோயின் எளியநிலையில் மாத்திரைகள்; உச்ச நிலையில் அறுவை மருத்துவம்; இந்த நோயின் இன்னொரு நிலை 10 விழுக்காடு புற்றுநோயில் போய் முடிகிறது.


தாமாக வருகிற கொடிய நோய் என்றால் அதை "முன்வினை' என்று ஏற்றுக்கொண்டு, வைத்தியம் செய்துகொள்வதோடு, இந்தப் பிறப்பில் புதிய பாவங்களைச் செய்யாமல் இருக்கலாம்!


மத்திய அரசின் யோசனையற்ற, ஆராய்ச்சியற்ற சட்டத்தால் கொடிய நோய் வரும் என்றால், நெஞ்சு கொதிக்கவில்லையா?


விஞ்ஞானத்தில் தவறுகள் நேரும்; திருத்தி முன்னேறுவதை விஞ்ஞானம் அனுமதிக்கிறது!


பத்தாண்டுகளுக்கு முன்பு போட்ட சட்டங்கள் தவறாகப் போய்விடுகிறபோது அவற்றைத் திருத்திக்கொள்வதுதான் அறிவுடைமை!


உப்பு குறித்த மத்திய அரசின் கலப்படச் சட்டத்தோடு சேர்த்து முதலில் உப்புக்கென்று உள்ள தனித் துறையையும் கலையுங்கள். இதற்கு ஒரு ..ஏஸ் அதிகாரி வேறு!


வடஇந்தியப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அயோடின் உப்பைக் கொடுங்கள்! தென்னிந்தியப் பகுதிகளில் தேவைப்படும் நோயாளிகளுக்குத் தவிர, மற்றுமுள்ள பெருவாரியான மக்களுக்கு சாதா உப்பைக் கொடுங்கள்.
சாதா உப்பை எல்லாக் கடைகளிலும் விற்கச் செய்யுங்கள்; அயோடின் உப்பை மருந்துக் கடைகளில் விற்கச் செய்யுங்கள்! சும்மா இருக்கிறவனை நோயாளி ஆக்காதீர்கள்! இருக்கிற துயரம் போதாதா?


உங்களுடைய அயோடின் உப்புச் சட்டத்தால் உற்பத்தி செய்து கொழுப்பவை பெரு முதலீட்டு போன்ற உப்பு தயாரிப்பு நிறுவனங்கள்!
அவை உண்டாக்கும் நோயால் கொழுப்பவை மருந்து நிறுவனங்கள்!


வடக்கின் தேவைக்குத் தெற்கு நோயுறுவதா?

பழ. கருப்பையா

நன்றி. தினமணி

1 கருத்து:

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.