திங்கள், 30 டிசம்பர், 2013

குளிர்கால நோய்கள் - எப்படி நலம் பெறுவது?

குளிர்கால நோய்கள் - எப்படி நலம் பெறுவது

நோய்கள் நம்மை சரியான நலவாழ்வுக்கான பாதையில் வழிநடத்தவே வருகின்றன. நோய்க்கான காரணத்தை சரியாகப் புரிந்து கொண்டு உடலுக்கு உதவினால் சுகம் தந்து விலகிச் செல்கின்றன. விழிப்புணர்வின்றி அழிக்க-தடுக்க முயன்றால் வாழ்நாள் முழுவதும் துன்பம் தருகின்றன.

குளிர்காலம் ஆரம்பித்ததில் இருந்தே தினமும் பல தொலைபேசி அழைப்புகள்  வந்தவண்ணம் உள்ளது. உங்கள் வலைபூவில் கற்ற உடல் நலத்துக்கான முறைகளைப் பயன்படுத்தி வருகிறேன். அதிலிருந்து எமக்கிருந்த உடல் தொல்லைகள் இல்லாது இருக்கிறோம்.  ஆனால், இப்போது குளிர்காலம் வந்தபின் இருமல், சளித் தொல்லை, சுரம், உடல்வலி, தோல் அரிப்பு, மற்றும் சீரண கோளாறுகள், தலைகனம், சைனஸ், சிறுநீர்பை கல், மூட்டுவலிகள் என இருப்பதாக பலர் ஆலோசனைகள் கேட்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் குளிர்காலத்துக்கு அஞ்சி தவறான வழிகளை மீண்டும் மேற்கொண்டவர்களாக இருந்ததை அறிந்தேன். பழக்கங்களை உறுதிப்படுத்தியதும் மருந்தின்றி மீண்டும் அவர்களது சுகம் உறுதியானது.

அவை இரவில் அதிக நேரம் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் தூங்குவது, சுடுநீரில் குளித்தல், கொதிக்க வைத்து ஆறிய நீரைக் குடித்தல், தலைக்கு குளிர குளிப்பதை நிறுத்திவிட்டு, உடலை மட்டும் சுடுநீரில் கழுவுதல், குளிர்ச்சி தரும் உணவுகளை நீக்குதல் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தல், தேவைக்கு அதிகமாக சுவட்டர், காது மூடி பயன்படுத்தல் போன்ற தவறுகளோடு கொசுவுக்கு அஞ்சி நஞ்சு நிறைந்த கொசுவர்த்திகளைப் பயன்படுத்துதல் எனும் மிகப்பெரும் கேட்டிலும் இருந்ததை காண்கிறேன்.

அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விபரங்கள் குளிர்கால நோய்கள் நீங்கி சுகம்பெற எல்லோருக்கும் உதவும்.

பொதுவாக நம் நாட்டில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கோலமிடுதல் பழக்கமாக்கியுள்ளார்கள். மலைக் கோயில் களுக்கு செல்பவர்கள் காலை, மதியம், இரவு குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக்கியிருந்தார்கள்.

கேரளா போன்ற குளிர் அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்கள் தினமும் இருமுறை தலைக் குளியல் குளிர்ந்த நீரில் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அதே போல குளிர் அதிகமுள்ள நாட்டு மக்கள் காலை மாலை குளியல் தொட்டியில் அதிக நேரம் படுத்திருந்து தங்கள் உடல் சூட்டை குறைத்துக் கொள்கிறார்கள்.

குளிர்காலங்களில் வெளியில் உள்ள குளிர்ச்சியில் இருந்து தன்னைப் பாதுகாக்க  நம் உடல் அதிகம் வெப்பம் அடையும். அந்த உடல் வெப்பத்தை தணித்துக் கொள்ள அறைவெப்பநிலையில் குளிரக் குளிப்பது அவசியமானது.

குளிர்காற்று வேகமாக வீசும் பொழுது தேவைப்பட்டால் மட்டும் காது மூடி பயன்படுத்தலாம். அதிக குளிரில் இருந்து காக்க மட்டும் கம்பளி ஆடைகள்  தேவை. வீட்டுக்குள் இருக்கும் போது கூடாது. அதிக சூட்டை உண்டாக்க கூடிய கசப்பு, புளிப்பு உணவுகளை, பால், கோழிக்கறி தவிர்க்கவும்.

எந்த காரணம் கொண்டும் உயிராற்றலை அழிக்கும் (ஆண்டிபயாடிக்) மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. கொசுவை நீக்க ஆடாதொடை, பூண்டுத் தோல், நொச்சி, நஞ்சற்ற கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தலாம்.

இரவுத் தூக்கத்தை முடிந்தளவு விரும்புங்கள் - பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் உடல் தன்னிலையில் உறுதியாக இருப்பதற்கும், பிரபஞ்ச ஆற்றலை பெற்று தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும் இரவு உறக்கம் தேவை.

அதே போல காலையில் 5 முதல் 7 மணிக்குள் காலைக்கடன்களை முடிப்பதும் கழிவுகளை  வெளியேற்றும் அமைப்புகள் சீராய் இயங்க ஆற்றல் தரும் நற்பழக்கமாம்.

குத்தூசி வர்ம விதிப்படி நெருப்பு எனும் மூலகம் காற்று எனும் மூலகத்தைப் பாதிப்பதால் ஏற்படும்  துன்பத்தை சரிசெய்ய நம் உடல் செய்யும் முயற்சியே  குளிர்கால நோய்கள்.

நம் உடலை அறிவோம் சுகமாக வாழ்வோம்.

மலர் மருந்துகளில் சீந்தில் பவளம், ஆடாதொடை, மொசுமொசுக்கை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப்  பயன்படுத்தலாம்.
அன்பை மறவா,

தமிழவேள் நளபதி
கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com