செவ்வாய், 4 ஜனவரி, 2011

எறும்புக்கடி

எறும்புக்கடி

Gopalakrishnan Radha வின் சிந்தனை
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். முதுகில் சுரீர் என்றது. தூக்கக் கலக்கத்துடனேயே கையால் தடவினேன். ஒரு எறும்பு. அதை அங்கேயே நசுக்கித் தேய்த்துவிட முயன்ற போது, கண் முன்னால் ஒரு பெரும் ஜோதி தெரிந்தது. கூசிய கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு பார்த்தால் பல வி.ஐ.பி.க்கள் வரிசையாக நின்றனர். முதலில் வந்தவர் புத்தர். ஹிம்சை செய்யாதே, அப்பனே. எவ்வுயிர்க்கும் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் துன்பம் செய்யாதே என்றார் அவர். உலகம் போற்றும் உத்தமர், ஆசிய ஜோதி, இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்த இவ்வளவு பெரிய மகான் சொல்லும் போது கேட்காமல் இருக்க முடியுமா, கையை இழுத்துக் கொண்டேன்.

புத்தர் சொன்னது எறும்பின் காதில் விழவில்லை போலும். மறுபடியும் கடித்தது. என் கை பரபரத்தபோது ஏசுநாதர் முன்வந்தார். உன் முதுகில் கடித்த எறும்புக்கு மார்பையும் காட்டு என்றார். மீண்டும் கையை இழுத்துக் கொண்டேன்.

இதற்குள் எறும்பு மூன்றாவது முறையாகக் கடித்துவிட்டது. கையை அசைக்க நினைக்கும்போதே மகாவீரர் தோன்றினார். உன் சௌக்கியத்துக்காக பிற உயிர்களைக் கொல்லாதே. எவ்வளவுக்கெவ்வளவு துன்பப் படுகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு முக்தி அருகாமையில் உள்ளது என்றார்.

எனக்கு முக்தி அடையவேண்டும் என்ற ஆசையெல்லாம் எதுவும் இல்லை. என்றாலும் அவர் மகாவீரர் என்று பெயர் வாங்கினவர். நான் ஒரு சாதாரண வீரன் என்றாவது பெயர் வாங்கவேண்டாமா? அறுபது கிலோ எடையுள்ள நான் கேவலம் அறுபது நானோகிராம் எடை.யுள்ள எறும்புக்குப் பயந்தால் எப்படி வீரன் ஆவேன்?

எறும்பு தனக்குக் கிடைத்த சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்து. நான்காவது முறையாகக் கடித்தது.

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் காலரா ஊசி போட வருவார்கள். மாணவர்கள் எல்லோரும் பயத்தாலேயே நடுங்கிச் செத்துக் கொண்டிருப்போம். ஒண்ணுமில்லேடா, சும்மா எறும்பு கடிக்கிறாப்பல தான் இருக்கும். பயப்படாதீங்கடா என்று ஆசிரியர் எங்களுக்குத் தைரியம் கூறுவார்.

இப்பொழுது பார்த்தால் ஊசி போட்டுக் கொள்வதே தேவலாம் போல இருக்கிறது. நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றிப் பத்து ஊசி போடுவார்களாமே, அது போல, முதுகில் ஒரு புள்ளியை மையமாக வைத்து எறும்பு 5 இடங்களில் ஊசி போட்டுவிட்டது. இதை இப்படியே விடக்கூடாது. நான் படும் அவஸ்தை பற்றி இந்த மகான்களுக்கு என்ன தெரியும்? இதோ எறும்பை நசுக்கப் போகிறேன்.

அப்பொழுது பாரதி தோன்றி, கம்பீரமான குரலில் பாடத் தொடங்கினார்.

தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே
அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவாய்

தின்ன வரும் புலியையே கொல்லாதே என்கிறார் பாரதி, கேவலம் இந்த அற்ப எறும்பினிடமா என் வீரத்தைக் காட்டுவது? எறும்பு வடிவமான பராசக்தியே, உன்னைக் கும்பிடுகிறேன்.

இதற்குள் பராசக்தி தன் ஏழாவது திருவிளையாடலை விளையாடிவிட்டாள். எனக்குப் பாரதியைக் கோபித்துக் கொள்வதா, பராசக்தியைக் கோபித்துக் கொள்வதா என்று தெரியாமல் நெளிந்து கொண்டிருந்தேன்.

எல்லோரும் எறும்புக்குத் தான் பரிந்து பேசுகிறார்கள். என்னை ஆதரித்துப் பேச யாருமே இல்லையா?

நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன், வருந்தாதே என்று கூறிக் கொண்டே எங்கிருந்தோ வந்தான் பார்த்தசாரதி.

. இந்த இக்கட்டான சமயத்தில் எங்கிருந்தடா உனக்கு இந்த கோழைத்தனம் வந்தது எழுந்திரு, போர் செய் என்றான்.

எறும்பைக் கொல்வது பாவம் அல்லவா? “

பாவம், புண்ணியம் பார்க்கும் நேரம் இதுவல்ல. எழுந்திரு . கடமையைச் செய்.“

எறும்பைக் கொல்வதா என் கடமை? “

உன் சுதர்மத்தைச் செய். உன் இயல்புப்படி செயல் படு.“ .

இத்தனை மகான்களும் கொல்லாதே என்கிறார்கள். நீ மட்டும் கொலை செய்யச் சொல்கிறாயே, இது நியாயமா கண்ணா? “

உன் பலவீனத்தை அலங்காரமான வார்த்தைகளால் மறைக்கப் பார்க்காதே .“

மாதவனுடன் நான் இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் போது, பின்னாலிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டது. கீதை தம்மபதம், பைபிள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தாலும் உனக்கு ஞானம் வராது. இத்தனை பேரும் கொல்லாதே என்கிறார்களே தவிர, எறும்பை எடுத்து நீ அப்பால் போடுவதை யாரும் தடுக்கவில்லையே. நீ ஏன் அதைச் செய்யவில்லை? “ சொன்னவர் ராமகிருஷ்ண முனி.

சாமி, நீங்க முதலிலேயே வந்திருந்தீங்கன்னா எனக்கு இத்தனை கடி வாங்கவேண்டி இருந்திருக்காதேஎன்றேன்.

ஞானம் என்பது புத்தகங்களிலிருந்தோ, குருமார்களின் உபதேசங்களிலிருந்தோ வருவதல்ல. ஏட்டுச் சுரைக்காய்களை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, நீ சொந்தமாகச் சிந்தனை செய். “

பேசுவது யார்? எட்டிப் பார்த்தேன். ஜே.கே. போய்க் கொண்டிருந்தார்.
தோழியின் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார் படித்தேன் .பகிர்ந்து கொள்கிறேன்