வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

நலம் தரும் உடனடி உணவுநம் வீட்டுப் பெண்கள் அஞ்சரைப் பெட்டியில் அனைத்து நோய் தீர்க்கும் ஆற்றல் பெற்ற வீட்டு மருத்துவர்கள். பெண்கள் மீண்டும் தன் நிலை உணர்ந்து விழிப்படைந்தால்- கேடு தரும் உடனடி உணவுகளும், மசாலாக்களும் கடைவீதியில் இருந்து மறைந்து விடும்.

குழம்புப் பொடி

மிளகாய் வற்றல் - நான்கு குவளை
து. பருப்பு - அரை குவளை
க. பருப்பு - கால் குவளை
உ. பருப்பு - அரை குவளை
மல்லி - ஒரு குவளை
மிளகு - மூன்று சிறு கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிறு கரண்டி
வெந்தயம் - நான்கு சிறு கரண்டி
உப்பு - தேவையான அளவு
சட்டியைக் காய வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்..பிறகு ஒவ்வொன்றையும் அரைத்து கலந்து கொள்ளவும். இதனை சோறு, இட்டளி, தோயை ஆகியவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.


கறிவேப்பிலை பொடி
கறிவேப்பிலை - ஒரு குவளை
உ. பருப்பு - நான்கு சிறு கரண்டி
க. பருப்பு - நான்கு சிறு கரண்டி
மிளகாய் வற்றல் - நான்கு
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
புளி - சிறிது
தேங்காய் துருவல் - அரை குவளை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை சோறு, இட்டளி, தோயை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிடலாம்.

வேப்பம்பூ பொடி
வேப்பம் பூ - ஒரு குவளை
மல்லி விதை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - 10 அயிரை(கிராம்)
மிளகு - 10 அயிரை
காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும்..பிறகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இதை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
பயன்- பித்தம் அமைதி பெறும். வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் தொலையும்.

பொட்டுக்கடலைப் பொடி
பொட்டுக்கடலை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - 10
தேங்காய் துருவல் - அரை குவளை
புளி - சிறிது
உப்பு - நான்கு சிறு கரண்டி
பூண்டு - பத்து பற்கள்
முதலில் பொட்டுக்கடலையை இடித்து சலித்துக் கொள்ளவும். உரலில் மிளகாய் வற்றல், உப்பு, புளி இடித்து பின் தேங்காய் துருவல் சேர்த்து இடிக்கவும். பின் எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். இதை சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

எள் பொடி
வெள்ளை எளை - ஒரு குவளை
மிளகாய் வற்றல் - நான்கு
மிளகு - சிறு கரண்டி
காயம் - சிறிது
உப்பு - இரண்டு சிறு கரண்டி
இவற்றை எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும் பிறகு ஒன்றாக எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதனை சோற்றுடன பிசைந்து சாப்பிடலாம்.
இந்த கலவையை நீர் விட்டு மைய அரைத்தால் அது எள் துவையலாகும்.
இனிப்பு வகைகள்


கேழ்ப்பை உருண்டை
கேழ்வரகு மாவில் திட்டமாக நீர் ஊற்றி பிசைந்து அடையாக தட்டி தோயைக் கல்லில் சுட்டெடுத்து கொள்ளவும் தேவையான அளவு வறுத்த வேர்க்கடலை, வெல்லம் கலந்து இடித்து அல்லது கலக்கியில்(மிக்ஸி) அரைத்து உருண்டையாக பிடித்து எடுத்துக் கொள்ளவும்.
எள் உருண்டை
எள்ளை இலோசாக வறுத்து வெல்லம் சேர்த்து இடித்து உருண்டை பிடித்துத் தரலாம்.

பொரி அரிசி உருண்டை
அரிசியை வறுத்து பொடிக்கவும். உடைத்த கடலையை பொடி செய்து இவற்றுடன் வெல்லம் கூட்டி கலக்கவும்.சிறிது வெந்நீர் மாவில் விட்டு பிசைந்து உருண்டையாக்கித் தரவும்.

முளைவிட்ட பாசிப்பருப்பு
பாசிப்பருப்பை முன்னிரவே ஊறவைத்து மறுநாள் காலை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்து விட்டால், மாலைக்குள் நன்றாக முளைத்து விடும்.அதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம். பிள்ளைகளுக்கு வெல்லம் சேர்த்துத் தரலாம்.

புடலங்காய் பாற்கன்னல்(பாயாசம்)
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்த்தும் புடலங்காய் துண்டுகளை சேர்த்து வேகவிடவும். வெந்த்தும் வெல்லம் பொடித்துச் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். விரும்பினால் இதோடு பால் சேர்க்கலாம். வறுத்த முந்திரிப்பருப்பு, சிறுமணகம்(ஏலம்) சேர்க்கவும்,அவல் உணவு வகைகள்
அவல் சோறு
அவல் - நான்கு குவளை
பச்சை உருளங்கடலை(பச்சைப் பட்டானி) - நான்கு குவளை
உருளைக்கிழங்கு துருவல் - ஒரு குவளை
இஞ்சி - இரண்டு அங்குலம்
பச்சை மிளகாய் - ஆறு
மஞ்சள் தூள் இரண்டு சிறு கரண்டி
பெருங்காயம் இரண்டு சிறு கரண்டி
சீரகம் இரண்டு சிறு கரண்டி
மல்லி விதை தூள் இரண்டு சிறு கரண்டி
மிளகு இரண்டு சிறு கரண்டி
துண்டு செய்த மல்லிக்கீரை - ஒரு குவளை
முந்திரி பருப்பு - அரை குவளை
மஞ்சைப் பழம் - இரண்டு
நெய் -நான்கு சிறு கரண்டி உப்பு தேவைக்கேற்ப . மஞ்சள் தூள், பெருங்காயம், சீரகம், மல்லி விதை தூள், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு இவற்றை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு துருவல், பச்சை உருளங்கடலை ஆகயவற்றோடு அரை குவளை தண்ணீரும் சேர்த்து புரட்டிப், புரட்டி கால் மணி நேரம் வேக விடவும். வெந்த்தும் அவலைக் கொட்டிக் கிளறி அடுப்பை விட்டு இறக்கி முந்திரிப் பருப்பு, துண்டு, துண்டாக வெட்டிய மல்லிக்கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
அவல் நார்ப் பொருள் நிரம்பிய நல்ல உணவு. மலச்சிக்கல் தீர்க்கும் அருமையான மருந்து. எப்பொழுதும் முளைவிட்ட கார் அவலையே பயன்படுத்துங்கள். சிற்றுண்டியாக பயன்படுத்தலாம்.
நீரிழிவு பிணியாளர்களுக்கு அரிசி சோற்றுக்கு மாற்றான உணவாக அமையும். தேவைப்பட்டால் சிறிது வெல்லம் கலந்து சாப்பிடலாம். அல்லது சிறிது உப்பு கலந்தோ, கலவாமலோ சாப்பிடலாம்.

பலவகை அவல் உணவு செய்முறைகள்

இனிப்பு அவல்
முளைவிட்ட கைகுத்தல் அவல் கையளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போடவும். பனைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை தூள் செய்து சேர்க்கவும். அவல் மூழ்கும் அளவிற்கு நீர் விட்டு ஊறவைக்கவும். உண்ணும் நேரத்தில் துருவிய தேங்காய்ப்பூ தூவி பரிமாறவும்.

சிறப்பு இனிப்பு அவல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி, பேரீச்சம் பழத்துண்டுகள், கற்பழவிதை, முந்திரிப்பருப்பு துண்டுகள் கலந்து வைத்து உண்ணவும். சுவையோ சுவை மிக அருமையாய் இருக்கும். சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.விருந்தினர்கள் பாராட்டி உண்பார்கள்.

பால் அவல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து உண்ணலாம். சர்க்கரை பிணியாலர்களுக்கு மிகவும் நல்லது. ஊறின உடனே உண்ணலாம். சர்க்கரை கலவாத ஏனைய முறைகளை நீரிழிவு பிணியாளர்கள் பயன்படுத்தலாம்.

எள் அவல்
ஊறவைத்த அவலுடன் வெள்ளை எள், தேங்காய் பூத் துருவல்,சிறிதளவு வெல்லம் கலந்து உண்ணவும். இதன் மணம் நம்மைக் கவரும், கை, கால வலிகள் இருந்தால் உடனே நீங்கிவிடும்.

நெல்லி அவல்
ஊறவைத்த அவலுடன் முன் கூறியவாறு எள்ளுக்கு மாற்றாக நெல்லியைத் துருவிக் கொட்டி கலந்து உண்ணலாம்.

காய்கறி அவல்
ஊறவைத்த அவலுடன் பச்சைக் காய்கறிக் கலவை மிளகு, சீரகத்தூள் கலந்து உண்ணலாம்.

அவல் கன்னல்
தேங்காய் பாலில் அவலை ஊறவைத்து அதில் உலர் கொடிமுந்திரி,சிறிதாய் நறுக்கிய வாழைப் பழத் துண்டுகள்,சிறு மணகம் ஆகியவற்றை போதுமான அளவு கலந்து நன்கு ஊறிய பின் சாப்பிடவும்.

புடலங்காய் அவல்
புடலங்காயை வெட்டி உள்ளே உள்ள சடை மற்றும் விதைகளை நீக்கிவிட்டு தூய்மை செய்து அவ்விடத்தில் கார அல்லது இனிப்பு அவலைத் திணித்து அடைக்கவும், அப்படியே சாப்பிடத் தரலாம். ஆவியில் வேகவைத்தும் தரலாம். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

அவல் இன்னுருண்டை
வெல்லம், சர்க்கரை கலவாத முழுமையான இனிப்பு உருண்டை. எள், வேர்க்கடலை உலர் கொடிமுந்திரி, பேரீச்சம்பழம் அனைத்தையும் உரலில் இடித்து, உருண்டையாய்ப் பிடித்து வைக்கவும். குழந்தைகள் விரும்பிச் சுவைப்பார்கள். சக்கரைப் பிணி உள்ளவர்களும் இதனைச் சாப்பிடலாம்.

அவல் உப்புமா
ஊறவைத்த அவலுடன் எலுமிச்சம் பழச்சாறு அளவாய் கலந்து மிளகு, சீரகம் சேர்த்து உண்ணவும். வேகவைத்த குறுநொய் உப்புமாவை விடச் சுவையாய் இருக்கும். மாலை நேரங்களில் சிற்றுண்டியாய் செய்து சாப்பிடலாம்.

உலர் அவல் கலவை
தூய்மை செய்த அவலுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை,நாட்டுச் சக்கரை தேங்காய்ப்பூ கலந்து சாப்பிடலாம். எதேனும் கொறிக்க நினைப்பவர்க்கு இது ஏற்ற திண்பண்டம். மலச்சிக்கலுக்கு கைகண்ட மருந்து.

சுண்டல் அவல்
ஊறவைத்த அவலுடன் முளைவிட்ட பச்சைப்பயறு, வேர்கடலை அல்லது கொண்டைக்கடலை திட்டமான அளவில் கலந்து சாப்பிடச் சுவையாக இருக்கும். இடைவேளை உணவாக பயன்படுத்தலாம். ஊட்டமான உணவாக விளங்கும். காரச் சுவைக்கு மிளகு, சீரகத்தூள், இனிப்புச் சுவைக்கு வெல்லம் கலந்து கொள்ளவும்.

பழச்சாறு அவல்
பல்லணிப் பழம்(மாதுளை),கொடிமுந்திரி, சாற்றுக்கனி(சாத்துக்குடி) இவற்றில் ஏதேனும் ஒரு சாறு அவலில் ஓர் அங்குலம் மேலாக நிற்கும் அளவிற்கு தளும்ப ஊற்றி அரை மணி நேரம் ஊற விடவ்ம். சுவைக்கு தேவைப்படின் வெல்லம் சேர்க்கலாம். மற்றபடி எதுவும் கலக்காமல் உண்பது நலம்..அவலைச் சாப்பிடும்போது அதில் ததும்பி நிற்கும் சாற்றையும் ஒரு கரண்டியால் குடித்துக் கொண்டு சாப்பிட சுவை மிகும்.

மாம்பழ அவல்
மாம்பழம் கிடைக்கும் காலங்களில் ஊறவைத்த அவலுடன் மாம்பழத்தை சின்னச் சின்னதாய், செதில் செதிலாய் நறுக்கிப் போட்டு கலந்து சாப்பிடுங்கள். சுவையைப் பற்றி கூற வேண்டியதூ இல்லை.. பிள்ளைகள் விட மாட்டார்கள்.

செங்கொழுப்பை(பப்பாளி) அவல்
ஊறவைத்த அவலுடன் செங்கொழும்பைப் பழத்தை சிறு துண்டுகளாய் நறுக்கி போட்டு கலந்து உண்ணலாம். அல்லது பழத்தை நெடுக்காக பாதியாக வெட்டி அதனுள்ளிருக்கும் விதை மற்றும் வித்தினை அகற்றி அதில் ஊறின அவலைப் போட்டு ஒரு கரண்டி கொண்டு அவலையும் பழத்தையும் சுரண்டி கலந்து சாப்பிடலாம்.

கற்பழப் பருப்புப்(பாதாம் பருப்பு) பால் அவல்
கற்பழப் பருப்பை நான்கு எடுத்து சிறிது நீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறிய பின் அந்நீரை அப்புறப் படுத்திவிட்டு பருப்பை மட்டும் மைய அரைக்கவும். அதனுடன் நீர் சேர்த்தால் பாலாகிவிடும். பாலை அவலில் ஊற்றி வெல்லம் கலந்து ஊறியபின் சாப்பிட அருமையாய் இருக்கும்.

மிளகு நீர் அவல்
வீட்டில் உணவுக்காக செய்யும் மிளகு நீர் அல்லது தக்காளி நீர் தூய்மை செய்த அவலில் தளும்ப ஊற்றி ஊறவைத்து அரைமணி கழித்து சாப்பிடலாம்.
உங்கள் சிறப்பு நலம்காக்கும் கைப் பக்குவத்தை- வீட்டு மருத்துவரே உங்கள் விருந்தினருடனும், பிற வீட்டு மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்வோம்...