சனி, 31 ஜூலை, 2010

வாழ்வா? வசதியா? - பாகம் 1

தற்போதய அழிவு வணிக அறிவியல் உலக மாந்தர்க்கு இழைத்திருக்கும் துன்பங்கள் மிகப் பல. அவற்றில் மக்கள் அடையாளம் கண்டிருப்பது மிகக் குறைவே. ஆனால் இவையே மாந்தர்க்கு தாம் செல்லும் பாதையை மாற்றாவிட்டால் அழிவு உறுதி என உணர்த்துகிறது. தன் நலம் விரும்பும் தன்னுணர்வு உள்ள மனிதர்கள் அறியப் போதுமானது நம் பட்டறிவு. சில வசதிகளைத் தந்திருந்தாலும் நவீன அழிவறிவியல் தந்த வாழ்க்கை முறை நம் வாழ்வை அழித்து விட்டது.

சோற்றில் நஞ்சைக் கலக்கும் உற்பத்தி முறைகள் உலக மக்களைக் கடும் நோயாளிகளாக்கி, உலகின் சுற்றுச்சூழலை நாசப்படுத்தி, உயிர் வாழ்க்கைக்கு மிக எதிரானதாக ஆக்கிவிட்டது. உயிர் ஆற்றலை அறியாத, அதை அழிப்பதையே தன் முறையாக கொண்டது எதிர்முறையம். பன்னாட்டு வணிகர்கள் மற்றும் நம் நாட்டுத் தரகர்கள் தம் கடும் விளம்பரத்தால் அதை ஒரு மருத்துவ முறையாக உலக மக்களை நம்ப வைத்து விட்டார்கள்.

உலக மாந்தர்கள் தம் அறிவுத்திறத்தாலும், பேரறிவாலும் பெற்று வளர்த்து நடைமுறையில் இருந்து வரும் உண்மையான நல வாழ்வைத் தரும் பல மருத்துவ முறைகளும்,மரபுவழிப் பண்பாட்டு வாழ்வும் உலக மக்களிடம் இருந்து வன்முறைகளால் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பல ஆயிரம் கோடிகளை இந்தக் கொள்ளை வணிகர்கள் செலவு செய்கிறார்கள்.
என்றாலும் மாந்த நேயமும் நுண்ணறிவும் மிக்க சித்தர்கள் ஆக்கித் தந்த சில வாழ்க்கை முறைகளைப் பயன்படுத்துவதாலே மட்டுமே இன்றளவும் உயிரோட்டமுள்ள மன நலமும், உடல் நலமும் விடுதலை உணர்வும் உள்ள சிலரையாவது நாம் பார்க்க முடிகிறது.

மாந்தனுக்குப் பொதுவாக வரக்கூடிய அனைத்து நோய்களை வரையறுத்து அவற்றைத் தீர்க்கும் வழிகளையும் தம் பேரறிவால் வகுத்துத் தந்த ஞானிகள் அதற்கும் மேல் இளமையை நீட்டித்தல்,வாழ்நாளை நீட்டுதல், உடலை அழியாது காத்தல் எனப் பல்வேறு ஆய்வுகளிலும் கரை கண்டவர்களாக உள்ளனர். அவரகளோடு எந்த வகையிலும் ஒப்பிட அருகதை இல்லாதது தான் தற்போதய வணிக அடிப்படையிலான அழிவறிவியல் மருத்துவம்.

சித்தர்கள் கண்ட அறிவியல் அனைத்து மாந்தர்களுக்கும் பொதுவானதாகவும், மிக எளிதானதாகவும், சுற்றுச்சூழலைக்  காத்து வளப்படுத்துவதாகவும், வரும் காலத்துக்கு  ஏற்றதாகவும்  மாந்த நேய அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

 நோய் அணுகா விதிகளை உருவாக்கி அதை மக்களின் வாழ்க்கை முறையாக்கித் தந்தவர்கள் சித்தர்கள்.
 ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களைச் சிறப்பு மருத்துவர்களாக்கி மனித அறிவை மேம்படுத்தி நோயற்ற குமுகத்தைப்  படைத்தவர்கள் சித்தர்கள்.
 உடல் நலமும், மன நலமும் உள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பிய குழந்தைகளை விரும்பிய வண்ணம் பெற்றுக்கொள்ள வழிகாட்டியவர்கள் சித்தர்கள்.

- கரு உருவாவதற்கு முன்பே தாய், தந்தையரின் உடல் நலம் இவ்வாறு இருந்தால் தான் பிறக்கும் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மனநலத்துடன் வாழும் என வரையறுத்துத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்.

- கருவில் இருந்து 16 அகவை வரை வரக்கூடிய நோய்களை வரையறுத்து அவற்றைத் தீர்க்கும் மருத்துவ முறைகளை உருவாக்கித் தந்தவர்கள் நம் முன்னோர்கள். அதற்கும் மேலாகக் கரு உண்டான காலத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை தாய்க்கு உடல், மனச்சோர்வை நீக்கி உடலை வலுவாக்கிச் சுகமான பேறுகாலத்தைத் தர வல்ல மருந்துகளை உருவாக்கித் தந்தவர்கள் நம்மவர்கள்.

இம் மருந்துகளை முறையாகப் பயன்படுத்தியவர்க்கு நல்ல சுகமான உணர்வுகளுடன் நலமான மகப்பேறு நடக்கும். அவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு அதன் முன் பரம்பரைக்கு இருந்த நோய்கள் வாராது, மேலும் 16 அகவை வரை வரக்கூடிய குழந்தைப் பிணிகள் எதுவும் அணுகாது.

பிறந்த குழந்தைகளை வளர்க்கும் முறைகளையும் மிகச் சிறப்பாக வகுத்துள்ளார்கள். குழந்தைகளை எப்படிக் குளிப்பாட்டுவது, நோய் தடுப்புக்கும் நலத்துக்குமான மருந்துகளை எப்படிப் புகட்டுவது, நலமறிந்து எப்படி உணவளிப்பது என நம் முன்னோர்கள் நம் வீட்டு மருத்துவர்களாம் பெண்களுக்குப்  பழக்கப்படுத்தியுள்ளனர்.

உலகின் துன்ப காலம்... நம்மை விட நம் மரபு வழி வாழ்வின் சிறப்பை நன்கு உணர்ந்தவர்களே இந்த நவீன அழிவு வணிகர்கள்.

எனவே தான் நமது மரபு வழி அறிவியல் படியான வேளாண்மை, பரவலான உற்பத்தி முறைகள், நல வாழ்வுக்கான மருத்துவ முறைகள், பண்பாட்டு உணவுகள், விளையாட்டுகள், கலை முதலியவற்றிலிருந்து நம்மை அன்னியப் படுத்துவதற்கான கல்வி முறைகளை உருவாக்கித் திணித்துப் பல வகைகளிலும் நம்மைத் தன்னை உணராத அடிமைகளாக்கி வைத்துள்ளனர்.


  பாடத்திட்டத்தாலும், பயிற்றுவிப்பவர்களின் தன்னலமில்லா அறியாமையாலும்,முதுகெலும்பு இல்லாத தன் காலில் நிற்க இயலாத, தன் மருத்துவத்துக்கும், இயல்பில் தன் முறைகளுக்கு நேர் எதிரான அழிவியல் முறையான எதிர்முறையத்துக்கும் வேறுபாடு தெரியாத, மருந்து நிறுவன முகவர்களை சித்த மருத்துவப் படிப்பு உருவாக்கி வருகிறது.

விழிப்புணர்வுள்ள இளைஞர்களான மாணவர்கள் தன் முயற்சியால் கற்றுக் கொள்வதைக் கூடத் தடுத்தே வருகிறார்கள். ஐந்தரை ஆண்டுகள் சித்த மருத்துவம் படித்துவிட்டு , மனித குமுகத்தின் சாவக் கேடான எதிர்முறைய மருந்துகளைப் பயன்படுத்துவது, அதனுடைய பரிசோதனைகளைப் பயன்படுத்துவது மூலம்  அந்தப் போலி மருத்துவத்தின் போலி மருத்துவர்களாக மக்களிடம் காட்டப்பட்டு அப்பாவி பிழைப்புத் தேடிகள் கீழ்மைப் படுத்தப்படுகின்றனர்

நமது பிள்ளைகளை ஒன்றுக்கும் உதவாத தறபோதய கல்வி  மனித நேயமற்றவர்களாக்குவதை விளக்கவே இதனை எழுதுகிறேன்.

எல்லாத் துறைக் கல்விகளும் இதை விட மோசம் தான்! தாவரங்கள் தங்கள் உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் என்பதைக் கூட அறியாத வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் இதற்கு உதாரணம்.

தன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள எதையும் செய்யத் துணிந்த மருந்து வணிகர்களின் கைகளில் உள்ளது உலக பொருளாதாரம். அமெரிக்கப் பொருளாதாரத்தை, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே.

இவர்கள் பிழைப்புக்கு ஒரே வழி பல்வேறு பெயரில் நோய்களை உருவாக்குவதும், அவற்றைக் குறைய விடாமல் காப்பதுமே தான் . இந்த பினந்திண்ணிகளின் முதல் எதிரி நோய் தீர்ப்பவர்களும், நலவழ்க்கைக்கான முறைகளுமே ஆகும்.

இதை நன்கு அறிந்திருப்பதால் தங்கள் கொள்ளையைக்க காப்பாற்றத் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை குணமளிக்கும் மருத்துவங்களை மக்களிடமிருந்து அன்னியமாக்குவதற்காக செலவு செய்கிறார்கள். நல்வாழ்வுக்கான வழிகளை மக்கள் அறியாமல் தடுக்க எல்லா வழிகளிலும் முயல்கிறார்கள் இந்த குமுக எதிரிகள்.

நோயற்ற வாழவே குறைவற்ற செல்வம். இது பேரறிவாற்றலின் கொடை. இந்த நல வாழ்வுக்கான ஆற்றலை அழிப்பதைத்தான் எதிர்முறையம் தங்களின் மருத்துவம் என்கிறது.

இதில் தான் எதிர்முறையர்களின் வெற்றியும் தோல்வியும் உள்ளது.

(தொடரும்...)