வியாழன், 9 பிப்ரவரி, 2017

நாம் அரசுகளை-அரசியலை, வழி நடத்த வேண்டும்.

அன்பின் புரிதலைப் பகிர்வோம்.


உண்மையான மக்கள்  நலன் காக்கும் அரசியலும், மக்கள் அரசியலுக்கான தொண்டர்களும் நம் நாட்டில் உருவாக வேண்டும்.


மெரினாவில் நடந்த அறப்போராட்டம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களால் நடத்தப் பட்டது. அந்த அறப்போராட்டம் நடந்த விதம் உலக மக்களால் வியந்து பாராட்டத் தக்க உதாரணமாக இருந்தது.

 தமிழர்கள் மன உணர்வுகளையும், மரபின் சிறப்பை, பொறுமையை, தூய்மையை, சூழல்மீதும், பிற உயிர்கள் மீதும், பிற இன மக்களின் மீதும் உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

தமிழர் ஒழுக்கத்துக்கும், ஒற்றுமைக்கும் கண்ணியத்துக்கும், உறுதிக்கும், வீரத்துக்கும் சான்றாக இருந்தது.

மக்கள் எதிரிகள் அடையாளம் காட்டப்பட்டனர், தனிமைப்படுத்தப் பட்டனர்.

இப்பொழுதும், இது வரையும் நடக்கிற அரசியல் வாதிகள், அவர்கள் நலம் விரும்பும், அவர்களிடம்  நலம் நாடும் தொண்டர்கள் நடத்தும் பங்காளிச் சண்டைகளும், போராட்டங்களும், அடிமைத் தனமும் உலக மக்களாலும், தமிழக மக்களாலும் கவணிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. இவர்களின் நடத்தையின் அருவருப்பான முகங்கள் இவர்களாலேயே சகிக்க முடியவில்லை.

நாட்டில் வறுமை, வறட்சி, சூழல் அழிப்பு, இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வுக்கான உறுதியற்ற நிலை, விவசாயத்தின் அழிவு, குழந்தைகளின், பெண்களின் உடல்நலக்குறைவு, பெருகிவரும் நோய்கள். அகால மரணங்கள் இவற்றைப் பற்றி சிந்திக்க தக்க அறிவோ, தேவையோ இல்லாதவர்களாக அரசியல் வாதிகளும், அவர்களின் தொண்டர்களும் இருக்கிறார்கள்.

தங்கள் புகழ் பாடுவதிலும் தங்கள் கொள்ளையைத் தக்கவைத்துக் கொளவதும் தலைவர்களின் கவணம். அவர்களிடம் இருந்து சிதறுவதை சேகரிப்பதில் தொண்டர்கள் கவணம், என இருக்கறார்கள்.
மொத்தத்தில் இவர்கள் தரங்கெட்டவர்களாக உலகெங்கும் உள்ளவர்  காரித் துப்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை, இவர்களை வைத்து தமிழர்கள் பற்றி தவறான கணக்கீட்டில் இருந்த உலகம் தமிழர்களை இவர்களில் இருந்து பிரித்துப் பார்க்க தெரிந்து கொண்டது. இதற்காக, மெரினாவின் அறப்போராட்டத்தை நடத்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

தமிழ் நாட்டு மக்களாகிய நாமும், மக்களையும் மக்கள் எதிரிகளையும் அடையாளம் கண்டு கொளவோம். இனியாவது  உண்மையான மக்கள்  நலன் காக்கும் அரசியலும், மக்கள் அரசியலுக்கான தொண்டர்களும் நம் நாட்டில் உருவாக வேண்டும்.

தமிழர்களாகிய நாம், இந்திய ஏன் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் உதாரணமாக நாம் அரசுகளை-அரசியலை, வழி நடத்த வேண்டும்.

நம்மால் முடியும். நம் தமிழ் மரபு நமக்கு வழிகாட்டும்.

 அன்பை மறவா,
தமிழவேள்