செவ்வாய், 21 ஜூலை, 2015

இறையை உணர்ந்தவர்க்குள் உரையாடல்



நான் சுவைத்த இறையை – புரிதலை, இறைவழி அருள் பார்வை (தீட்சை) வழியாக தாமும் பெற்றுச் சுவைத்த இறைவழி அறிவர்கள்.  இறைவழியில் சுகம் பெற்றவர்கள் மற்றும் இறைத் தேடலில் உள்ளவர்களுக்காக எழுதுகிறேன். 
இறைவழி அருள் பார்வை வழியே கிடைத்த இறை ஞானத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நமது இறைஅருள் சத்தியை மேலும் சிறப்பாக பயன்படுத்தவும் மாதம்தோறும் நடக்கும் நமது பகிர்தல் கூட்டங்கள் உதவுகின்றன.
இறைவழி அருள் பார்வைக்கு பின் நமக்கு கிடைத்த நன்மைகள், நாம் பிறருக்கு சுகமளித்தது போன்ற பல்வேறுபட்ட இறைஅனுபவங்களை நமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் காண்பது குறித்து நமக்குள் பகிர்ந்து கொள்கிறோம். பிற இறை அறிவர்களின் பகிர்தலைக் கேட்கும் போது நாம் தவறவிட்ட, நம் வாழ்க்கை நிகழ்வுகளில் உள்ள இறை ஞானப் பாடங்கள் பற்றிய விழிப்புணர்வு வருகிறது. நமது தன்முனைப்பு குறைகிறது அதனால், நமது இறைவழியில் சுகமளிக்கும் ஆற்றல் மேன்மை பெறுகிறது.
இறைஅருள் சத்தி என்பது மனிதனாக பிறந்த அனைவருக்குள்ளும் உள்ளது, அவர் அவர்களது நன்மைக்காக இறை வழங்கியது. இது தான் நமது நலவாழ்வுக்கு  அடிப்படை. இந்த அடிப்படை ஆற்றல் நமது மனதின் தூய்மையால் மேம்படுகிறது. மனத் தூய்மையில்லாமையால் கெடுகிறது.
பெருமை, கோபம், பொறாமை, வெறுப்பு, சுயநலம், கண்டுகொள்ளாமை, பயம் போன்றவை மனதின் கேடுகள் ஆகும். இறைக்கு இணையாக தன்னை நினைக்கும் ஆணவம், அந்த ஆணவத்தால் நாம் செய்யும் செயல்கள், நன்மை தீமைகளை உணராத நிலை ஆகியவற்றால் நமது நான் எனும் ஆன்மா இறை அருள் சத்தியை இழக்கிறது.
பணிவு, அன்பு, பொறுமை, கருணை, தன்னுயிர் போல் பிறரை நேசித்தல், கனிவு, துணிவு ஆகியன மனதை தூய்மையாக்கும். எல்லாம் இறைச் செயல் என உணர்தல், நன்றி கூறல், முழுமையை சிந்தித்துணர்தல் ஆகியன இறை அருள் சத்தியை பெருக்கும் வழி.

மனத் தூய்மையின்மையே :துன்பம் தந்து பின் மரணத்துக்கு இட்டுச் செல்லுகிறது. இறை அருள் சத்தி முழுமையாக நீங்கிய நிலையில் உடல் எனும் ஐந்து மூலகத்தின் மீது ஆன்மாவின் ஆளுமை இல்லாமல் போவதால் ஐந்து மூலகங்கள் கலைகின்றன உடல் அழிகிறது.
தூய்மையற்ற மனதினால் வந்த துன்பங்களைக் களைய அல்லது அடையாளப்படுத்தவே உடல் நோய் எனும் தற்காப்பு நடவடிக்கை எடுக்கிறது. நோய் வரும்போது விழித்துக்கொண்டு நமது தவறுகளைத் திருத்திக் கொண்டால் நோய்கள் சுகம் கொடுத்து விலகிப்போகின்றன. நோய்களை எதிராக நினைத்து தடுக்க, அழிக்க முனைந்தால் உடல் தன்னை பாதுகாக்க மேலும் பல நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, அதனால் நமது இறையருள் சத்தி சிதறடிக்கப்பட்டு வீணாகி அழிகிறது.
நம்மிடம் சுகம் பெற வருபவர்கள் நமது நன்மையை நாடும் இறைவழிபாட்டால் இறையருள் சத்தி பெற்று உடன் சுகம் பெறுகிறார்கள். பெற்ற சுகத்தை விழிப்புடன் அவதானித்து, இறைக்கு உணர்வுடன் நன்றி செலுத்துபவர்கள் மேலான சுகத்தை பெறுகிறார்கள். இவர்கள் இறையருளால் மனத்தூய்மைக்கான வழிகளைப் பெற்று தனது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்.
பெற்ற சுகத்தைக்கூட உணராத நிலையில் மன இறுக்கத்தில் இருப்பவர்கள் தனக்கு வலி நீங்கியதை ஏதோ மனித முயற்சியின் விளைவு அல்லது தான் செலவு செய்த பணத்தின் பலன் என நினைத்து அடுத்து எப்போது மருத்துவம் பெற வருவது என்பதில் நின்று விடுகிறார்கள் சிலர்.
தன்முனைப்பின் உச்சத்தில் நின்று சிந்தித்துணரும் ஆற்றலை இழந்தவர்களாய் இருப்பவர்கள் தாம் பெற்ற சுகத்தைக்கூட ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாய், நன்றியற்றவர்களாய் இருக்கக் காண்கிறோம். 
சுகமளித்த பின் சிலர், அவர்கள் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டபின்னும் அவர்களை மனித அறிவின் கேடான சந்தேகம் விடுவதில்லை. தற்பெருமை விடுவதில்லை. தனது வணிக அறிவை மாற்றிக்கொள்வதில்லை. அவர்கள் தனது கேடான தீமையை நாடும் பழக்கத்தால் கெடுகிறார்கள்.
சிலர் தம் உடலின் தன்னறிவை மதிக்காமல்  பணம் மற்றும் வணிக அறிவையே பெரிதாக எண்ணித் தனது அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து அதனால் வரும் பெரும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
இறைவனே சுகமளிப்பவன். எல்லோரையும் சுகப்படுத்த வேண்டும் என வீணில் தன்முனைப்பு காட்டுவது நமக்கு நல்லதல்ல. இறைவழியில் இருந்து நெடுந்தூரம் விலகிச் செல்பவர்களை துரத்தித் திரிய வேண்டியதில்லை. மதவாதிகள் மற்றும் தலைவர்கள், படிப்பாளிகள், குருமார்கள், மருத்துவர்கள் ஆகியோரை இறைவனுக்கு இணையாக வைத்தவர்களை மாற்றுவது நமது வேலையல்ல. இவர்களாக - இறையருளால் தேடிவரும்போது அன்பான இறையை அவர்களுக்கு அடையாளங்காட்டுவோம். 
யாரையும், எதையும் எடைபோட, தீர்ப்புச் சொல்ல வல்லது முழுமையான இறைதான் என்பதை மறக்க வேண்டாம். பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ நினைப்பது நல்லதல்ல.
மனந்திருந்தி நலவாழ்வை விரும்புபவர்களுக்கும், நன்மையைத் தேடுபவர்களுக்கும், வாழ நினைப்பவர்களுக்கும் இறை வழியில் சுகமளிப்பதன் மூலம் நாம் பெற்ற இன்பத்தை பகிர்ந்து கொள்வோம். 

  நாம் இறைவழியில் சுகமளிக்கும் போது நமக்கு, பிறர் மூலம் நம் தவறுகளையும், மனதின் கேடுகளையும், அதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டி நாம் மனம் திரும்ப உதவுகிறான். மனம் திரும்பியவர்களை மன்னித்து சுகமளிப்பது நானே என சுகமளித்து, உள்அமைதி தருவது இறையே.
எல்லாம் இறைச் செயல் என்றதை உணர்ந்தவர்க்கு பலன் குறித்த எதிர்பார்ப்பு நீங்கி விடும். நடப்பதற்கு இறைவனுக்கு நன்றி கூறி மேலான புரிதலை வேண்டுதல் வேண்டும்.

நாம், இறைவழியில் நலம் நாடிவருபவர்களுக்கு சுகமளிக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாக தங்களுக்கான இறை அனுபவத்தை பெறுகிறார்கள். நமக்கும் புதிது புதிதான புரிதல் இனிய இறை அனுபவங்கள் கிடைக்கிறது. இறைவழியில் சுகமளிப்பது ஒரு தொழிலாக இல்லாமல் அது ஓர் ஆன்மீக அனுபவமாக உள்ளது. நாம் இறைக்கு நன்றி கூறுவதன் மூலம் இதை சிறப்பாக்கி கொள்கிறோம்.
நமது வாழ்வின் ஒவ்வோர் தேவைகளையும் இறைவழியில் பெற விழிப்புணர்வும், புரிதலும் வேண்டும். இறைவழியில் சுகமளித்தல் எனும் சித்தியினைப் பெற்றது ஓர் அடையாளம் தான். நம்முள் இருக்கும் இறையை மனதின் தளைகளில் இருந்து விடுவித்து முழுமையாக அதனுடன் இயைந்து வாழ்தல் தான் தனி மனித விடுதலை. அல்லது ஞானமடைதல் என அழைக்கப்படுகிறது.
இதற்கு வழி இறையின் குணங்களை நான் பெறுவது தான். எதுவுமாக இல்லாது இருத்தல், எல்லாம் தாமென உணர்தல், முழுமையான அன்பு நிலை.
நேற்று எனக்காக, எனது மனைவி சொன்னது. அப்போது டைனமோ இம்பாசிபில் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். டைனமோ இது போன்ற செயல்கள் செய்ய காரணம் அவர் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை, எல்லோரிடமும் அன்பாக இருக்கிறார். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். தான் என்ற அகந்தை இல்லாமல் இருக்கிறார். செய்த செயல் மீது சொந்தம் பாராட்டாது இருக்கிறார். மனதில் எந்த குற்றமும் இல்லை அதன் காரணமாகவே அவர் இறையாற்றல் அதிகம் பெற்றிருக்கிறார் என்றாள். நீங்கள் இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள். அவளது புரிதல் மிக சிறப்பாக இருக்கிறது.
பெண்கள் இயல்பாகவே ஞானத்துக்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.
அன்பை மறவா,

தமிழவேள் நளபதி






(ஞாபகத்துக்காக, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஞாயிறு ஆவடி மரபுவழி நலவாழ்வு மையத்தில் நடக்கவுள்ள பகிர்தல் கூட்டத்துக்கு வருக. தேவையுள்ள புதியவர்களுக்குத் தெரிவியுங்கள்)

கைபேசி 9345812080,9444776208
மின்னஞ்சல் thamizhavel.n@gmail.com


 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனது அனுபவங்களின்-தேவைகளின் அழுத்தம் என்னை எழுத வைத்துள்ளது. உங்கள் கருத்துகளால் இவை செழுமைப் படும்.