திங்கள், 1 செப்டம்பர், 2014

சர்க்கரை நோய்க்கான உணவு / உடல் நலம், மனநலத்துக்கான உணவு.


மனிதன் நலமாக வாழ அடிப்படையான தேவைகள். பசி. தாகம், தூக்கம், ஓய்வு, கழிவு நீக்கம், சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு, விழிப்புணர்வு, புரிதல், அமைதி போன்றவையாம்.

பசி, தாகம் என்பன நமது உடல் மற்றும் மனதின் தேவையைக் குறிக்கும் உணர்வுகள் ஆகும்.

ஐந்து மூலகங்களால் ஆன நம் உடல் தனது நலத்துக்காக இந்த ஐந்து மூலகங்களையும் சீராக வைத்திருக்க வேண்டியுள்ளது. சுவையறிதல் எனும் ஆற்றல் இந்த மூலகத் தேவைகளை நமக்கு உணர்த்தி பொருந்திய உணவைத் தேர்ந்தெடுக்க நமக்கு உதவுகிறது.

சுவைகளின் பயன்.

இனிப்புச் சுவை மண் மூலகத்தை வலுவாக்குகிறது மண்ணீரல், வயிறு எனும்  சீரணத்துக்கான அடிப்படைக் கருவிகளை சீராக இயக்குகிறது. மன ஓர்மைக்கு காரணமாகிறது.

உவர்ப்புச் சுவை நீர் மூலகத்தை வலுவாக்குகிறது. மறு உற்பத்திக்கான கருவிகளான சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பையை சீராக இயக்குகிறது. மன தைரியத்தைக் கொடுக்கிறது.

கசப்புச் சுவை நெருப்பு மூலகத்தை வலுவாக்குகிறது. இதயம், சிறுகுடல், இதய உறை, வெப்ப கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியன சீராக இயங்க உதவுகிறது. மகிழ்வுக்கு காரணமாகிறது.

கார்ப்பு, துவர்ப்பு காற்று மூலகத்தை வலுவாக்குகிறது. நுரையீரலையும், பெருங்குடலையும் சீராக இயக்குகிறது.மன அமைதிக்கு காரணமாகிறது.

புளிப்புச் சுவை ஆகாய மூலகத்தை வலுவாக்குகிறது. கல்லீரல், பித்தப்பையை சீராக இயக்க உதவுகிறது. மன பொறுமைக்கு காரணமாகிறது.

மென்மை தேவை.

 பசியும் தாகமும் உடல் தேவையின் மெல்லிய நுட்பமான உணர்த்துதல். இதை விழிப்புணர்வுடன் அவதானித்து நமது தேவைகளை மென்மையாக நிறைவேற்றுதல் வேண்டும்.

உதாரணத்துக்கு,

இனிப்பு சுவை தேவை என உடல்மனம் கேட்கும் போது இரசாயன நஞ்சான சீனியை பயன்படுத்துவதா? இல்லை இயற்கையால் வந்த பனைவெல்லம், பழங்கள், தேன் பொன்ற நன்மை தருவதை பயன்படுத்துவதா?

உவர்ப்பு தேவையில், இரசாயன சேர்க்கையான அயோடின் கலந்த உப்பு நல்லதா இல்லை இயற்கையால் விளைந்த உப்பு நல்லதா? என முடிவு செய்தல் வேண்டும்.

கசப்பின் தேவையில் மென்மையான அளவுள்ள சுண்டைக்காய், பாகல் போன்றவை போதும். சிறியாநங்கையோ, வேப்பந்தழையோ உணவல்ல.

 இரண்டாவதாக,

எவ்வளவு தேவை என அறியவும் சுவைத்தல் உதவுகிறது நாக்கில் தான் அளவையும் தரத்தையும் முடிவு செய்யமுடியும். வாயை மூடி கவணத்துடன்-சுவைத்து சாப்பிட்டால் தான் சுவை மற்றும் தேவையின் அளவு தெரியும். கவணமின்றி அள்ளி விழுங்கினால் உடலுக்கும் மனதுக்கும் சுமையாகும்-நஞ்சாகும்.

'சீரணம் விரல்களில் தொடங்கி நாக்கில் முடிகிறது'.

உணவு குறித்த பார்வையில் தற்போதய படிப்பறிவு மிக கேடானதாக விழிப்புணர்வின்றி உள்ளது.
பால், இட்லி, தோசை, வெண்ணெய், மைதா மாவு, கொழுப்பு நீக்கப்பட்ட உணவுகள், இரசாயனத்தால் தூய்மை படுத்தப்பட்ட உணவுகளும், நீரும். மெல்லிய கீரை  போன்றவற்றை மென்மையான உணவு என நம்பி கெடுகிறார்கள். இவற்றில் பெரும்பாலானதை நஞ்சென தவிர்த்தல் வேண்டும். பலவீனமான சீரணமுள்ளவர்கள் தொடவே கூடாது.

நெய், பழங்கள், பிஞ்சு காய்கறிகள், கொழுப்பு நீக்கப்படாத எண்ணெய், சிறு தானியங்கள் இயற்கை உணவுகள். தூயநீர் சூடாக்கப்படாமல் மண்பாணையில் குளிர்வித்துக் குடித்தல் நல்லது.

பசி, தாகம் அறிந்து பொருந்திய, தூய, எளிய உணவைத் தேர்ந்தெடுத்து படைப்பாற்றலுக்கு நன்றி உணர்வுடனும் அன்புடனும் உண்ண நலம் தரும்.

தூக்கம், ஓய்வு.
படைப்பாற்றல் நமக்கு எல்லாவற்றையும் தாராளமாகத் தந்துள்ளது மனிதன் ஒன்றும் பெரிதாக உழைக்கத் தேவையே இல்லை.

தான் எனும் அகம்பாவத்தாலும், விழிப்புணர்வற்ற சுயநலத்தாலும், அடிமை மனோபாவத்தாலும், இயற்கையையும் சக மனிதர்களையும் மென்மையாக அணுகத் தெரியாது; உறக்கத்துக்கும் ஓய்வுக்கும் நேரமின்றி உழைத்தே கெடுகிறான்.

மனிதன் நவீனஅறிவியல் உயர் தொழில் நுட்பம் என நினைக்கும் அனைத்தும் அவனுக்கும் இயற்கைக்கும் இடைவெளியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலங்கினும் கேடான அடிமைத்தனத்தையும் அழிவையுமே மனிதனின் தற்பெருமைக்கு தன்டனையாக படைப்பாற்றல்  தந்துள்ளது.

ஏழை பணக்காரன் என வேறுபாடில்லாது துன்பத்தை தவிர எதையும் கொடுக்கவில்லை மனிதனின் இந்த இயற்கையின் மீதான தூய்ப்பு வெறி.

தூக்கம், ஓய்வு மனிதனின் உடலையும் மனதையும் புதுப்பிக்கிறது. இரவுத் தூக்கத்தை பகல் தூக்கம் ஈடு செய்யாது.
இரவுத் தூக்கத்தை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும் நடைபிணங்களாகவும், மனநோயாளிகளாகவும் மாறி வருகின்றனர். இந்த காரணத்தாலேயே அவர்களின் பெற்றோர்களும் நோயாளிகளாய் உள்ளனர்.

மக்களின் நலம் பேணும் பல நாடுகளில், மாலை 7 மணிக்கு மேல் அலுவலகங்களோ, கடைகளோ, குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ இயங்குவதில்லை. காலை 4.00 மணிக்கு மேல் உறங்குவதும் இல்லை. 7.00 மணிக்கு மேல் வீட்டில் தூங்குபவர்களும் அங்கில்லை.

இரவு விளக்கு வைக்கும் முன் உணவருந்திவிட்டு முன்னிரவில் படுங்கள், காலை கோழி கூப்பிட எழுந்து விடுங்கள் என நம் ஊர்ப் பெரியவர்கள் கூறுவது இன்னும் காதுகளில் மறையவில்லை. அவர்கள் வசதியில்லாமல் அப்படிக் கூறவில்லை. தனது ஞானங்களால் உணர்ந்த அறிவியல் உண்மையையே கூறினர். இரவு தூங்காத ஒரு ஆரோக்யமான நபரையும் நான் பார்த்ததில்லை.

நாம் ஓட்டு மொத்தமாக நலவாழ்வுக்கான விதிகளை மறந்துவிட்டு, நமது பிள்ளைகளுக்கும் மறைத்துவிட்டு அவர்களை அழிவுப் பாதையில் வேகமாக இழுத்துச் செல்கிறோம். 

நமது வருங்கால வாரிசுகளில் யாராவது நமது அறியாமையின்- பொறுப்பின்மையினால் ஏற்பட்டிருக்கும் அழிவில்  இருந்து பிழைத்திருந்தால்  நம்மை மன்னிக்க மாட்டார்கள். நான் இதை மிகையாக கூறவில்லை. நமது தமிழகத்தின் கடற்கரையோர இரசாயன ஆலைகள்- நவீன அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்களைப் பாருங்கள்; நமது வீட்டில் உள்ளவர்கள் உடல் நலத்தைப் பாருங்கள் புரியும்.

கழிவு வெளியேற்றம்

உண்வு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம்.

உணவுண்பதும், நீரருந்துவதும், இரவுத் தூக்கமும், ஓய்வும், சக மனிதர்களிடம் கொள்ளும் நட்பும், உறவும் மன அமைதியும், புரிதலும் என எல்லாமே கழிவு வெளியேற்றத்துடன் தொடர்புடையது.

உடல் கழிவுகளை வெளியேற்றுதல் போலவே எண்ணங்களின் கழவுகளும் நீக்கப்பட வேண்டும். இவையனைத்தும் தூய்மையாகவும், எளிமையாகவும், மென்மையாகவும் இருந்தால் தான் கழிவு வெளியேற்றம் மென்மையாய் இருக்கும்.

 சக மனிதர்களுடனான உறவு, இயற்கையுடனான உறவு.
நமது நலமும் பிறர் நலமும் இயற்கை நலமும் பிரிக்க முடியாதது என உணர்தல் வேண்டும். பிற மனிதர் மற்றும் இயற்கையின் உறவில் மென்மையும், தூய்மையும், அன்பும், நன்றியும் வேண்டும்.

விழிப்புணர்வுடன் நமது தேவைகளை உணர்ந்தால் தான் படைப்பாற்றல் பற்றிய புரிதல் உண்டாகும். இந்த புரிதல் எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அதற்கேற்ப அமைதி எனும் இறை அருள் கிடைக்கப் பெறும்.

 அன்புடன்,
தமிழவேள் நளபதி

 கை பேசி; 93458112080, 9444776208