திங்கள், 25 ஆகஸ்ட், 2014

இறைவழி மருத்துவ ஞானம் புரிதல்


இறை என்றால் என்ன?
அகிலங்களையெல்லாம் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் படைப்பாற்றலின் வழி. மனித அனுபவ அறிவுக்கு எட்டாதது. எளிதானது, மறைவானது, நுட்பமானது, அன்பானது எல்லாம் வல்லது, எல்லாமாக இருப்பது, எதுவாகவும் இல்லாதிருப்பது.

இறைவழி என்றால் என்ன?
இறைவழி என்பது, நமது தேவைகளைப் பெற இறைவனால் அனுமதிக்கப் பட்ட வழியில்; இறையச்சத்துடன் நன்மையை நாடுவது.

 நோய்கள் என்றால் என்ன?                                 
 அழிவற்றதாகவும், அறிவுள்ளதாகவும், படைப்பாற்றல் உள்ளதாகவும், புதுப்பித்துக் கொள்ளக் கூடியதாகவும், ஐந்துமூலகங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாயும் இறைவனால் உருவாக்கப்பட்டதே மனித உடலும், மனமும்.

ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களால் இறைவனை மறந்து, தன்னை உணராததால் உண்டானதே பயம், கவலை, வெறுப்பு, சுயநலம், மறதி, சலனம், சோம்பல் போன்ற ஏழு திரைகள். இவையே   உடல் மற்றும் மனதில் பிணிகளை, தளைகளை உண்டாக்குகின்றது. மனிதன் இயற்கையுடன் இயந்து வாழ வேண்டியவன். ஆனால், தன்உணர்வில்லாததால் இயற்கைக்கு அடிமையாகிறான்.  

இந்த தளைகளை நீக்க உடல்-மனம் செய்யும் முயற்சியே நோய்களாக அறியப்படுகிறது. 

மருத்துவம் என்றால் என்ன? 
நம்மைப் படைத்த படைப்பாற்றல் நம்முள் இருந்து; நம்மை உருவாக்கி, வளர்த்து, பாதுகாத்து வருகிறது அது நமது நலத்துக்குப் போதுமானது என்பதை உணர்த்துவதும். நோய்கள் நன்மைக்காகவே வருகின்றன அதைப் புரிந்து கொண்டு உடல் இயற்கைக்கு உதவுமாறு அறிவுறுத்துவதும், வழிகாட்டுவதும். விழிப்புணர்வின்றி அறியாமையில் உள்ள மனிதருக்கு தேவையாய் உள்ளது.

 இந்த அறியாமையை நீக்கி, உடலையும் மனதையும் தூய்மையாக்கி அவர்களது ஆன்மாவை இறையாற்றலுடன் மீண்டும் தொடர்பு கொள்ள உதவுவதையே மருத்துவம்  என்கிறோம்.

ஞானம் என்றால் என்ன?
இறைவனிடம் நன்மையை நாடுவோர்களுக்கு தன்னை உணரும் புரிதலை அந்த படைப்பாற்றல் கொடுக்கிறது. இதுவே இறைஞானம் ஆகும்.

இறைவழி மருத்துவம் என்றால் என்ன?
இறைவன் அருளால் தன்னுணர்வு பெற்ற மனிதன் தன் நன்மைக்கைகாகவும், பிற மனிதர்கள் - உயிர்களின் நலனுக்காகவும் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலிடம் பொறுப்பேற்படுத்தி நன்மையை நாடுவதே இறைவழி மருத்துவம்.

இறைவழி மருத்துவம் எல்லோரும் செய்ய முடியுமா? படிப்பு அல்லது பயிற்சி தேவையா?
 இறைவனே சுகமளிப்பவன்.
இறைவழி மருத்துவம் செய்ய படிப்போ அல்லது பயிற்சியோ தேவையில்லை. தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்தவர்களும், சான்றோர்களால் உணர்த்தப் பெற்றவர்களும் இறைவழியில் தனக்கும், பிறர்க்கும் சுகம் பெற முடியும்.

சான்றோர்கள் என்பவர் யார்?
இறைஞானங்களைப் பகிர்ந்து கொள்ள இறைவனால் அனுமதிக்கப்பட்டவர்கள்.
எனது எனும் தனிமை மாறி நான் எனும் முழுமைக்குள் வந்தவர்களின் புரிதலுக்கும், விழிப்புணர்வுக்கும், விடுதலை வேட்கைக்கும் தக்கவாறு இறைவன் இறைஞானங்களில் மேல் நிலையைத் தருகிறான்.
தனது நான் என்பது இறைவன் படைத்த எல்லா படைப்புகளுடனும், அவற்றின் நன்மை, தீமைகளுடனும் சம்மந்தப் பட்டது என்பதை உணர்ந்தவர். தனது விடுதலை என்பது பிறரின், பிறிதின் விடுதலையோடு இணைந்தது என அறிந்தவர்கள்.

மருந்துகளுடன் சேர்த்து இறைவழி மருத்துவம் எடுத்துக் கொள்ளலாமா?

நமது சான்றோர்கள் நமது உணவையும், பழக்க வழக்கங்களையும் உடலுக்கும், மனதுக்கும் நாம் வாழும் சூழலுக்கு தக அமைத்துள்ளனர். அவர்கள் நமக்களித்துள்ள இயற்கையோடு இயந்து வாழும் ஞானங்களைக் கற்று பயில வேண்டும் இதுவே மருத்துவம். நமது அன்றாட உணவையே மருத்து என ஆக்கியுள்ளனர். 

நம்மைச் சுற்றியுள்ள மூலிகைகளை, தாதுக்களை நன்மையாக பயன்படுத்த கற்றுக் கொடுத்துள்ளார்கள். இவற்றை கற்று இறையச்சத்துடன் பயன்படுத்துவது நன்மை தரும்.

 சுயநலத்துக்காக இறையச்சமில்லாத, பெருமை பிடித்தாட்டும் மருத்துவர்கள் தரும் மருந்துகளை; விழிப்புணர்வில்லாமல், அறியாமையில் பெருமைக்காக உண்பதும், பரிந்துரைகளை கேட்பதும் கேடுதரும்.

இறைவழி மருத்துவம் செய்வதற்காக தியானம் அல்லது வழிபாடு தேவையா?
தேவையில்லை. நமது உடலே நாம் உணரும் இறையின் இல்லம். நமது தேவைகளை – இறைவன் நமக்கு அளித்ததை, விருப்பத்துடன், இறையச்சத்துடன் சுவைப்பதே வழிபாடு.

இறையச்சம் என்பது தேவையா?
இறைவன் மாபெரும் கருணையாளன். நாம் அவன் தரும் நன்மைகளை நன்றியுணர்வுடன் பெற்றுக் கொள்ளவேண்டும்.
பெருமையின் காரணமாக நாம் செய்யும் குற்றங்களை நமக்கு அடையாளப்படுத்தி திருத்த; தேவைப்படும் போது சோதனைக்காளாக்குவது இறைவனே; உணர்ந்து திருந்தும் போது மன்னித்து ஏற்றுக் கொள்வதும் இறையே.

நாம் அளவு மீறும் போது கொடுத்ததை திரும்ப எடுத்துக் கொள்வதும் இறையே. நன்றியுடன் இறைவன் நமக்களித்த ஞானங்களைப் பயன்படுத்துவோம, மேலும் ஞானங்களுக்காக இறையையே நாடுவோம். 

அன்பை மறவா,
தமிழவேள் நளபதி.

கைபேசி 93458 12080, 94447 76208
thamizhavel.n@gmail.com