வியாழன், 25 ஆகஸ்ட், 2011

மக்கள் போராட்ட திசைவழி மாறல் வேண்டும்

அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!

அண்ணா அசாரே நாடகம் நன்றாகவே அரங்கேறி வருகிறது. இந்த சுற்றுலா போராட்டத்திற்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் இரண்டுபேர் முக்கியமானவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அருணா ராய், இன்னொருவர் கேரளாவை சேர்ந்த அருந்ததி ராய். (இரண்டுபேருமே வட இந்தியாவில் புகழ்பெற்றவர்கள்).


அருணா ராய்

அருணா ராய் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். இந்திய ஆட்சிப்பணி பதவியை துறந்து மக்கள் பணிக்கு வந்தவர். இன்று ஊழல் ஒழிப்புக்கு மிகப்பெரிய ஆயுதமாக உள்ள தகவல் உரிமை சட்டத்தைக் கொண்டுவர முதன்மை காரணமாக அமைந்தது இவரது கடின உழைப்புதான். இராஜஸ்தான் மாநிலத்தில் அவரது முயற்சியால் வந்த சட்டம்தான் பின்னர் இந்திய சட்டமானது.  அது மட்டுமின்றி நூறு நாள் வேலை சட்டம் வருவதற்கும் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இத்தகைய சாதனைகளுக்காக புகழ்பெற்ற மகசாசே விருதுபெற்றவர் அருணா ராய்.

அதுமட்டுமல்ல,  இன்று அண்ணா அசாரே தத்தெடுத்துள்ள "லோக்பால்" எனும் கருத்தை முதலில் முன்னெடுத்ததே இவர் தலைமையிலான தகவல் அறிவதற்கான மக்கள் உரிமை தேசிய பிரச்சார அமைப்புதான்.

இப்போது - அரசு மற்றும் அண்ணா அசாரேவுக்கு மாற்றாக ஒரு மாற்று லோக்பால் மசோதாவை இவர் உருவாக்கிவருகிறார். அண்ணா அசாரேவின் லோக்பால் உண்மையில் சனநாயகத்துக்கு கேடுசெய்யும் என்கிறார் அருணா ராய். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளைக் கொண்ட அமைப்பிடம் உச்ச பட்ச அதிகாரத்தை அளிப்பது மிகப்பெரிய கேடாகவே முடியும். அதிகாரம்தான் ஊழலை உண்டாக்குகிறது. உச்சபட்சமான அதிகாரம் என்பது உச்சபட்சமான ஊழலையே உருவாக்கும் என்கிறார் அவர்.

அருணா ராய் குறிப்பிடும் மற்றொரு விடயம் மிகவும் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் 'நீதித்துறை, நிருவாகத்துறை, நாடாளுமன்றம் - இவற்றுக்கு இடையே ஒரு அதிகார சமநிலை உள்ளது. ஒரு அமைப்பு தவறு செய்தால், மற்றொரு அமைப்பு தட்டிக்கேட்க முடியும். ஆனால், வெறும் தன்னிச்சையான அதிகாரிகள் சிலரை இதற்கு மேலாக கொண்டுவர முயல்வது சனநாயகத்தைக் கொலை செய்வதாகும்.

அதிலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் நாடளுமன்றம் திருத்த முற்பட்டால் அண்ணா அசாரேவிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்றும் பேசுவது சனநாயகத்தை அவமானப்படுத்தும் செயல்.

எல்லாம் சரி அண்ணா அசாராவின் போராட்டத்துக்கு பெரிய ஆதரவு உள்ளதே? என்கிற கேள்விக்கு - இதைவிட பெரிதாக இந்தியாவில் போராட்டங்கள் நடந்தது உண்டு, நர்மதா அணை எதிர்ப்புக்கு மிகப்பெரிய கூட்டம் கூடியது - ஆனால், அங்கெல்லாம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புதான் இல்லை என்கிறார் அருணாராய். அவரது கருத்தை இங்கே காண்க: Aruna Roy: Jan Lokpal Bill impractical, undemocratic


அருந்ததி ராய் 
அருந்ததி ராய் வேறுவிதமாக கேள்வி கேட்கிறார். இந்த போராட்டமே அரசாங்கத்தின் துணையுடன் ஊடகங்களினால் நடத்தப்படும் போராட்டம் என்கிறார் அவர்.

அண்ண அசாரே உண்ணா விரதம் இருக்கும் அதே சமயத்தில்தான் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக பத்தாயிரம் பேர் உண்ணா விரதம் இருக்கிறார்கள். அதுகுறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாதது ஏன்? 

அண்ணா அசாரேவின் வீடியோ செய்தி திகார் சிறைக்கு உள்ளே பதிவு செய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. வேறு எந்த ஒரு போராட்டத்திலாவது போராடுபவர் சிறைக்கு உள்ளே இருந்து தொலைக்காட்சியில் பேசமுடியுமா? 


அண்ணா அசாரேவின் போராட்டத்திற்கான தேவைகளை புதில்லி மாநகராட்சி செய்துதருகிறது. போபால் நச்சுவாயுவை எதிர்த்து போராட முன்வந்தால் இந்த உதவி கிடைக்குமா?

அரசின் அநீதியை எதிர்த்து அண்ணா அசாரே போராடுகிறார். அதே அரசின் அநீதியை எதிர்த்து மாவோயிசவாதிகளும் போராடுகிறார்கள். ஆனால் மாவோயிச போராளிகளை ஊடகங்கள் ஆதரிக்க மறுப்பது ஏன்? அண்ணா அசாரே போராட்டம் சமூகத்தின் மேல்தட்டு மக்களின் போராட்டம். மாவோயிச போராட்டம் என்பது அடித்தட்டு மக்களின் போராட்டம். ஆக, அநீதிக்கு எதிராக போராடுவது முக்கியமல்ல, யார் போராடுகிறார் என்பதுதான் ஊடகங்களுக்கு முக்கியம் என்கிறார் அருந்ததி ராய்.

நிலத்தையும் வாழ்வாதாரங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இழக்கும் மக்கள் வந்தேமாதரம் என்றும் பாரதமாதாகீ ஜே என்றும் எப்படி போராட முடியும்? என்று கேட்கிறார் அருந்ததி ராய்.

இப்போது அண்ணா அசாரே ஆதரவாளர்கள் "நீங்கள் எங்களை ஆதரிக்காவிட்டால், நீங்கள் உண்மை இந்தியர்களே இல்லை" என மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் கூறுகிறார் அருந்ததி ராய்.

ஊழல் என்பது கணக்குத்தணிக்கை சிக்கல் அல்ல. அது சமூக ஏற்றத்தாழ்வுகளுடனும் தொடர்புடையது. அதிகாரக்குவிப்பே ஊழலுக்கு அடிப்படை என்று கூறும் அருந்ததி ராய் - லோக்பால் விசாரணை வரம்பிற்குள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஊடகங்களையும் கொண்டுவர வேண்டும் என்கிறார்.

"தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஊடகங்களையும் லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்" என்கிற இந்த ஒரு கோரிக்கையை கேட்டால் அண்ணா அசாரே கூட்டம் ஓடி ஒளிந்துவிடும். ஏனெனில், போராட காசு கொடுப்பதும் ஓசியில் விளம்பரம் கொடுப்பதும் அவர்கள்தானே!

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து போராடிய தமிழரல்லாத மிகச்சிலரில் - அருந்ததி ராய் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கருத்தை இங்கே காண்க: ARUNDHATI ROY: I'd rather not be Anna

--
Regards
Maheswari