இன்றைய அனுபவம்
இன்று காலை உணவு சாப்பிடும் முன் பெங்களூரிலிருந்து வசந்த்-ன் அழைப்பு. தனக்கு குடலிறக்க நோயால் உள்ள துன்பத்தைக் கூறி, இது முற்றிய நிலையில் இருக்குமோ இதை சித்த மருந்துகளால் சரிசெய்ய முடியுமா? என அஞ்சுவதாகக் கூறினார்.
நன்கு உணவைச் சுவைத்துச் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்றேன். எப்படி சுவைத்துச் சாப்பிடுவது? என்றார். இது குறித்து அவருடன் பகிர்ந்து கொண்டவை.
திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் மருந்து எனக் குறிப்பிடுவது இந்த சுவைத்தலையே. நான் இறைவழி மருத்துவம் என குறிப்பிடுவது இந்த சுவைத்தலையே. இறைவழிபாடாக நான் புரிந்து வைத்திருப்பதும் இறைவன் தந்த வாழ்வைச் சுவைத்தலே.
அதாவது,
அறுசுவை உணவைப் பசியறிந்து சுவைத்து உண்பவர்க்கு, இயல்பான நீரைத் தாகமறிந்து சுவைத்துக் குடிப்போர்க்கு எல்லா நலமும் கிடைக்கும். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
அறுசுவை உணவு
இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு இவையே அறுசுவை. அறுசுவைகள் முறையே, மண், காற்று, நீர், ஆகாயம் நெருப்பு என ஐந்து மூலக சக்திகளைத் தன்னகத்தே கொண்டவை.
நமது உடலின் முக்கிய கருவிகள் பன்னிரண்டு அவை,
வயிறு, மண்ணீரல், பெருங்குடல், நுரையீரல், சிறுநீர்ப்பை. சிறுநீரகங்கள், பித்தப்பை, கல்லீரல், சிறுகுடல், இதயம், உடல் வெப்பக் கட்டுப்பாட்டமைப்பு, இதய உறை – இந்த முக்கியக் கருவிகளின் கட்டுப்பாட்டில் உடல் முழுமையும் உள்ளது. மூளை இக்கருவிகளின் தேவைகளுக்காக இயங்கும் கருவியே. உடலின் நல்லது கெட்டது இந்த கருவிகளின் செயல் திறனைப் பொறுத்தே அமையும்.
இந்த பன்னிரண்டு முக்கிய கருவிகளும் முறையே ஐந்து மூலக ஆற்றல்களின் வழிபட்டவை.
இவற்றுக்குத் தேவையான சத்தியை அறுசுவைச் சத்தி மூலமாகவே பெறுகின்றன
நமது உணவில் இச்சுவைகளில் ஒன்றின் தன்மையுள்ள உணவு இல்லாவிடில் அந்த சுவையால் இயங்க கூடிய முக்கிய கருவியின் இயக்கத்துக்கு தேவையான தூண்டுதலும் சத்தியும் கிடைக்காது. அதன் காரணமாக மொத்த உணவின் சீரணமும் சீர்கெடும்.
உதாரணமாக நாம் உண்ணும் உணவில் இனிப்புச் சுவை இல்லையெனில் வயிறு –மண்ணீரல் இரண்டுக்கும் தேவையான இயக்க ஆற்றல் இருக்காது மேலும் இனிப்புச் சுவையைச் சீரணிக்கக் கூடிய சுரப்பிகள் எதுவும் சுரக்காது வயிறு மண்ணீரல் அனியமாக இல்லாத நிலையில் இரைப்பையின் உள்வரும் உணவினைச் சீரணிக்கத் தேவையான சுரப்பிகள் சரிவரச் சுரக்காமல் நீண்ட நேரம் இரைப்பையினுள் கிடக்கும் உணவு கெடும். அது அடுத்தடுத்துச் சாப்பிடும் பொழுது கட்டாயமாகத் தள்ளப்பட்டுக் கெட்ட சக்தியாக, கழிவாக மாறும்.
இந் நிலையில் சாப்பிட்ட உணவு தரமான உணவுச்சத்தியாக - குளுக்கோசாக மாறாது; கெட்ட உணவுச்சத்தியாக –கெட்ட குளுகோசாக மாறுகிறது. எனவே, இதை உடல் ஏற்றுக் கொள்வதில்லை, புறக்கணிக்கிறது.
அதாவது, உணவுச்சத்தியை செல்களுக்குக் கொண்டு சேர்க்கும் கணையநீர் சுரப்பதில்லை. தரமான உணவுச்சத்தியை மட்டுமே உடல் ஏற்றுக் கொண்டு கணைய நீரைச் சுரக்கும். இல்லையெனில், அதைப் புறக்கணித்துக் கழிவாக்கி வெளித் தள்ளிவிடும்.
இது போல் தான், அறுசுவைகளில் எந்த சுவை குறைந்தாலும் சீரணம் கெட்டுப்போகிறது. உடல் செல்களுக்குத் தேவையான உணவுச் சத்தி கிடைக்காததால் செல்கள் வலுவிழக்கின்றன. அதன் காரணமாகவே அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நமது உடலின் பல்லாயிரம் கோடி செல்களுக்கும் தேவையான உணவுச் சத்தியை, ‘அறுசுவை உணவுகளை சுவைத்து உண்பதால் மட்டுமே’ பெறமுடியும்.
பொருந்திய உணவு
நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்ற காரணிகளால் மாறுபடும் நம் உடல்த் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதே பொருந்திய உணவாகும்.
இயற்கையாக படைப்பாற்றல் தந்த உணவுகள் முழுமையானவை. இயற்கையோடு இயந்து வேளாண்மை செய்வோர் தரும் உணவு அமுதமே.
தாய்ப் பாலிலும், இளநீரிலும், எண்ணெய்களிலும், தண்ணீரிலும் சத்தைப் பிரித்தும், கூட்டியும் அந்த உணவுகளை நஞ்சாக்கும் நவீன அறிவியல்க் கோமாளிகளின் வழிகள் மிகத் தவறானது இது நலக்கேட்டை உண்டாக்குவது.
வணிகர்கள் நிலத்திலும் உணவுப்பொருள்கள் மீதும் கொட்டும் நஞ்சுகளால் விளைந்த பொருட்கள் உண்ணத் தகாதவை. இவர்கள் வீரியம் என்த் தரும் பொருட்கள் எந்த நலமும் தராத சுவையற்ற சொத்தையே இவை மலட்டுத்தனத்தையே மனிதரிடம் உருவாக்கும். இவற்றில் நம் உடல் செல்களுக்குத் தேவையான பொருட்கள் சத்துக்கள் இருப்பதில்லை.
நலவாழ்வை நாடுவோர் இயற்கையான, நஞ்சில்லா உணவுகளை, நீரை - படைப்பாற்றலுக்கு நன்றியுணர்வுடன் உண்ணுதல் வேண்டும்.
இந்த காலத்தில் இதுவெல்லாம் சாத்தியமா என புலம்பி ஒதுங்கிப் பயனில்லை. வேளாண்மை குறித்த சமூக விழிப்புணர்வும் மாற்றமும் நமது உடனடி- உயிர்த் தேவை.
பசியறிதல்
பசியும், தாகமும் உடலின் அடிப்படைத் தேவைகளில் உள்ளவை.
பசியும், தாகமும் செல்களுக்கான உணவுச் சத்தி தேவைகளை நமக்கு உணர்த்தப் படைப்பாற்றலால் ஏற்படுத்தப் பட்டவை.
மனிதன் தனது உணர்வுகளை மறுப்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறான். தனது உடல் அறிவுகளைப் புறக்கணித்துத் தன்னை உணர்வற்றவனாக ஆக்கிக் கொள்கிறான்.
செல்களின் திரட்சிகளால் உருவான முக்கிய உறுப்புகள் தங்கள் தேவைக்கேற்ப சுவைகளைக் கேட்கிறது. குறிப்பிட்ட வகையான சுவையுள்ள உணவை சாப்பிடவும் நம்மைத் தூண்டுகிறது. அதே போல அதிகமாக ஒரு சுவை சேர்க்கப் பட்டாலும் அதை உணர்த்தி போதுமென்கிறது. இந்த உடலின் மொழியை அறிந்தவர்கள் மட்டுமே உடலை சுகமென்பர்; மற்றவர்கள் சுமையென்கின்றனர்.
உதாரணமாக, கர்ப காலத்தின் ஆரம்ப மாதங்களில் பெண்கள் புளிப்பில் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரணம் வரப்போகும் குழந்தைக்கான நனமையாக தாயின் உடலை சுத்தமாக்குவதற்காக கல்லீரல், பித்தப்பைகளை நன்கு இயக்குவதற்காக அவற்றிற்கான சுவைகளை உடல் கேட்கிறது.
அது போல, உழைப்பு, வாழும் இடத்தின் சூழல், மனநிலை, உடலின் சத்திநிலை போன்ற பல காரணங்களால் பசி, தாகத்தில் வேறுபாடு இருக்கும். இவையெல்லாம் உடலின் அறிவு.
இந்த அறிவுக்கு ஒத்துப்போகாத மருத்துவர்களின் படிப்பறிவு கூறும் கருத்துக்களைக் கேட்டு, கருவிகளைக் கேட்டு உணவை அளந்து சாப்பிடுபவர்கள், தண்ணீரை அளந்து குடிப்பவர்கள் தங்கள் உடலுக்கு துரோகமிழைத்ததன் பலனை நோயாக அணுபவிக்கிறார்கள்.
பசித்து பின் அளவறிந்து உண்பவர்க்கு நோயோ, பத்தியமோ இல்லை.
சுவைத்து உண்ணுதல்
உணவின் சுவையை அறிந்து சுவைச்சத்தியாக மாற்றும் உறுப்பு நாக்கே. நாக்கைத் தான்டி உள்ளே போகும் சுவையால் பயனேதும் இல்லை. நாக்கில் சுவை சத்தி பிரிக்கப்படாமல் உள்ளே போகும் உணவு தொடர்புடைய முக்கியக் கருவிகளைப் பாதிக்கும்.
மனிதனுக்கான சீரணம் குறித்த அறிவு, ‘’விரலில் தொடங்கி நாக்கில் முடிகிறது’’ என்பர் பெரியோர். அதாவது பொருந்திய உணவைத் தேர்ந்தெடுத்துச் சுவைத்து உண்ணுவதுடன் மனிதனின் அறிவு நின்றுவிட வேண்டும். அதறகு மேல் ஆக வேண்டியதை உடலின் அறிவு பார்த்துக் கொள்ளும்.
நல்ல பசியாலும், களைப்பாலும் சோர்ந்து போன ஒருவர் இரண்டு கவளம் உணவு சாப்பிட்டதும் தெம்பு பெறுவதும், அடுத்து, உடலுழைப்புக்குத் அனியமாகி விடுவதும் நாக்கில் பிரிக்கப்படும் சுவை சத்தியாலேயே. பசியுள்ளவர் நாக்கில் அறுசுவையும் பட்டவுடனே அச்சுவையுடன் சம்மந்தப்பட்ட உறுப்புகள் நாக்கினால் உறிஞ்சப்பட்ட சுவைச்சத்தியால் தூண்டப்பட்டு பலம் பெறுகின்றது.
வாயில் இட்ட உணவு பற்களால் நன்கு அரைக்கப்பட்டு உணவுள் இருக்கும் சுவைகள் அனைத்தும் நாக்கால் உறிஞ்சப்பட்டு சப்பையான உடன் கூழாக இரைப்பையுள் இறங்கினால் ஏற்கனவே சுவைச்சத்தியால் அனியமாக்க்கப்பட்டு இருக்கும் சீரணச் சுரப்பிகள் சுரந்து சீரணம் முறைப்படும். அழகான முறையில் உடல்ச் செல்களுக்குத் தேவையான உணவுச்சத்தி கிடைக்கும் உடல் மகிழ்வுறும்.
அறுசுவை உணவு எல்லோர்க்கும் முடியுமா?
இங்கு நாம் கவணிக்க வேண்டியது இரண்டு.
1. சுவை நாக்குக்குத் தான் வயிற்றுக்கல்ல. நாக்கில் சுவை பட்டாலே, அச்சுவை தொடர்புடைய உடலின் முக்கிய கருவிகள் வலுப்பெற்று அனியமாகின்றன.
2.
சுவையின் தன்மையுள்ள உணவு என்பது வேறு. உதாரணம். தேன், இனிப்பாகத் தெரிந்தாலும் அதன் சுவைக்குணம் கசப்பு, நெல்லி புளிப்பாக தெரிந்தாலும் அதன் சுவைக்குணம் உப்பும், துவர்ப்பும் ஆகும்.
வீட்டில் சமைப்போர் சுவைக்குணம் பற்றிய அறிவினை வளர்த்துகொள்க. எல்லா நேரமும் விதவிதமாக சமைக்க முடியாது. அது போல் வீட்டில் உள்ள அனைவரின் சுவைத்தேவைகளும் ஒருவருக்கொருவர் வேறுபட்டுத்தான் இருக்கும் எல்லோருக்கும் தனித்தனியே சமைத்தல் முடியாது. எனவே, சமைப்போர் மென்மையான சுவையுடன் உணவுகளை செய்து வைத்துக் கொள்க.
சாப்பாட்டு மேசையில் இனிப்புக்காக நாட்டுச்சர்க்கரை, கசப்புக்காக சுன்டைக்காய் வற்றல், துவர்ப்புக்காக பேரீச்சங்காய் அல்லது மாவடு, புளிப்புக்காக எலுமிச்சை, காரத்துக்காக மிளகுசீரகப் பொடி, உவர்ப்புக்காக நெல்லிக்காய், வெள்ளரி போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். அந்தந்த பகுதியில் எளிதில் கிடைக்கும் பொருள்களை சுவைத்தன்மை அறிந்தவர் பயன்படுத்தலாம். சாப்பாட்டுத் தட்டிலெயே வைத்துவிடுவது இன்னும் சிறப்பு.
உடல்ச் செல்களின் தேவையால் தூண்டப்பட்ட சுவையுணர்வு காரணமாக எந்தச் சுவையை யார் நாக்கு நாடுகிறதோ அந்த சுவையை அவர்களாகவே தேவையான அளவு எடுத்துக் கொள்வர்.
வீட்டில் சமைப்பவர்களுடன் ஏற்படும் சுவை குறித்த சண்டைகளும் முடிவுக்கு வந்துவிடும்.
உணவுண்ணும் போது கவணிக்க வேண்டியவை
1.
உடலினுக்கு தேவையான பொருந்திய உணவு.
2. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3. வாயை மூடி நன்கு மென்று சாப்படுதல். வாயை மூடாமல் எவ்வளவு நேரம் மென்று கொண்டிருந்தாலும் உமிழ் நீர் சுரக்காது. உமிழ் நீர் கலக்காத உணவு தரமான உணவுச்சத்தியாக மாறாது.
4. இந்த உணவில் இருந்து நன்மை பெறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும்.
5. உணவு உண்ணும் போது பேசக்கூடாது. (பேச வாய் திறக்கும் போது உட்புகும் காற்று உமிழ் நீருடன் உணவை சேரவிடாது தடுத்து விடும். சீரணம் கெடும்.)
6.
கண்களுக்கும் வேறு வேலைகள் கொடுக்க்க் கூடாது.
7. மன உணர்வுகளுக்கு (கோபம், வருத்தம், பயம் போன்ற) ஆட்பட்ட நேரங்களில் உணவருந்துவதை தவிர்க்க வேண்டும்.
8. உணவருந்தும் போதும், முன்னும், பின்னும் தண்ணீர் தேவைப்படாது. ஏதேனும் காரணத்தால் தேவையெனில் மிக அளவாகப் பயன்படுத்தவும்.
9. தாகம் வரும் போது மட்டும் தண்ணீர் அருந்துக.
10. இயல்பான கிணற்றின் நீரே சிறப்பு.
11. கொதிக்க வைத்த தண்ணீர் கூடாது.
12. நவீன முறையில் சுத்தப்படுத்தப் பட்ட நீர் நஞ்சே.
13. மண்பானை நீர் சிறப்பு.
14. தண்ணீர் அருந்தும் போது வாயை மூடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
15. சாப்பிடும் போதும், நீரருந்தும் போதும் தரையில் காலை மடித்து அமர்ந்து உண்ணுதல் வேண்டும்.
16. நாற்காலியில் காலை தொங்கவிட்டபடி சாப்படுவது கூடாது.
17. கை, கால் முகம் கழுவிய பின் உணவருந்தல் வேண்டும்.
18. குளித்த பின் முக்கால் மணி நேரமாவது இடைவெளி விட்டு பின் சாப்பிடுதல் வேண்டும்.(உடல் வெப்பம் தன்னிலைக்கு வர வேண்டும்)
19. சாப்பிட்ட உடன் குளித்தல் கூடாது. குறைந்த்து இரண்டரை மணி நேரமாவது இடைவெளி தேவை.
இந்த முறைகளை முறையாக பயின்று பழக்கமாக்கிக் கொண்டால் எந்த நோயும் வராது. வந்த நோய்கள் எதுவாக இருப்பினும் நீங்கி விடும். எப்படியெனில்,
நமது உடல் பல்லாயிரம் கோடி செல்களால் ஆனது. செல்களின் தொகுப்பே திசுக்களாகவும், திசுக்களின் தொகுப்பே உடல் கருவிகளாகவும், புலன் உறுப்புகளாகவும் உள்ளது. செல்களின் உறுதித் தன்மையைப் பொருத்தே உடல் அமைகிறது. நாம் உண்ணும் உணவு, நீர், காற்று, விண் என பல்வேறு சக்திகளும் நமது செல்களுக்குச் சென்றால் தான் செல்கள் அறிவுடனும், ஆற்றலுடனும் இயங்க முடியும். இதில் குறைவேற்பட்டால் வரும் தீமைகளை நீக்க வேறு வழிகள் இல்லை.
உடல்ச் செல்களுக்குத் தேவையான சத்திகளை முறைப்படுத்தலே உண்மை மருத்துவம். எனவே தான் ஆசான் திருவள்ளுவர் மருந்து எனும் அதிகாரத்தில் உணவுண்ணும் முறைகளை மட்டுமே சொல்லி மருத்துவத்தை முடிக்கிறார்.
அன்பை மறவா,
தமிழவேள் நளபதி
thamzhavel.n@gmail.com
Siddhahealer.blogspot.com
(நண்பர்களே இது குறித்த உங்கள் கருத்துகளை என்னிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்க)
மிக நல்ல படித்து சுவைப்பதற்கான பதிவு. எழுத்துக்கும், பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குஅன்புடன்,
புவனா
இதை விட தெளிவாக விளக்கமாக நல வாழ்வுக்கும் உண்ணும் உணவுக்கும் உள்ள உறவை விளக்க முடியாது......
பதிலளிநீக்குஎனக்கு தான் எல்லாம் தெரியும், உனக்கு ஒன்றுமே தெரியாது என்று நம்மை பயமுறுத்தும் நவீன மருத்துவமும் செயல்படும் இக்காலத்தில் அனைத்தையும் அனைவருக்கும் சொல்லித்தரும் மருத்துவரா என்று வியக்கிறோம்.....நன்றி .....நீங்கள் கூறியுள்ள அனைத்தையும் செயல்படுத்தவும் விழைகிறோம்.....
Good and truth tips.
பதிலளிநீக்குBest Regards,
Ponraj.T
Vanakkam,
பதிலளிநீக்குit is true. " summavaa sonnanga periyavanga....'NORUNGA THINDRAL NOORU VAZHVU' nnu..." thanks a lot madam.
அருமை அருமை .
பதிலளிநீக்குromba nalla tips. follow panna vendum
பதிலளிநீக்கு